×

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பெகாசஸ் வழக்கில் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக் கேட்பு  விவகாரத்தில் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பெகாசஸ் செயலியின் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக  செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள்  உள்ளிட்டோர்களின் அலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் கடந்த சில  மாதங்களாகவே இந்தியாவில் புயலை வீசி வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடரே இந்த விவகாரத்தால் முழுமையாக முடக்கப்பட்டது.

இந்நிலையில், இது ஒட்டு கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த  விவகாரம் பற்றி ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2 பக்க பிரமாணப் பத்திரம்  திருப்தியாக இல்லை.’ என தெரிவித்த நீதிமன்றம், பெகாசஸ் தொடர்பான முழு விவரங்கள்  அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி  கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது. மேலும், பெகாசஸ் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி  மதன் பி லோகூரை மேற்கு வங்க மாநில அரசு நியமனம் செய்தது.

அதற்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி  என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெகாசஸ் ஒட்டு  கேட்பு  தொடர்பான விவகாரத்தில் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு  பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pegasus ,Supreme Court , Nationwide, Pegasus case, interim injunction, Supreme Court`
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...