×

கிரைம் நியூஸ்

கூவம் ஆற்றில் சடலம் மீட்பு: சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள கூவம் ஆற்றில் ஆண் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் உடல் சிதலம் அடைந்து இருந்ததால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
வீட்டில் கொள்ளை: பெருங்களத்தூரை சேர்ந்தவர் சுசீலா(60). ஓய்வுபெற்ற அரசு வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன், ரூ.2 லட்சம் ரொக்கம், விலையுயர்ந்த பைக் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தங்கம் கடத்தியவர் கைது: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது(27), ஸ்டென்லெஸ் ஸ்டீல் குழாய்களில் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை ஒரு கிலோ 389 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம். அவரை கைது செய்தனர்.
தாய், மகன் தற்கொலை: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரவீந்திரன்(47). இவரது மனைவி பாலஈஸ்வரி(43). இவர்களது மகன் லக்‌ஷித் நாராயணன்(8). கொரோனா தொற்று பாதிப்பினால் கடந்த மே 2ம் தேதி ரவீந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மிகுந்த மன உளைச்சலில் பாலஈஸ்வரியும், அவரது மகனும் இருந்தனர். மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஹவுசிங் காலனி பகுதியில் வசித்துவரும் சகோதரி முத்துலட்சுமியின் வீட்டில் கடந்த ஒரு மாதமாக பாலஈஸ்வரி மகனுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பாலஈஸ்வரியும்,  லக்‌ஷித் நாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
* திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைகுப்பத்தை சேர்ந்தவர் பரத்குமார். இவரது மகன் ரித்திக்(10), தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்தான். நேற்று காலை தொட்டில் மாட்டும் கொக்கியில் புடவையால் ரித்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
ரேஷன் அரிசி பறிமுதல்: பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்திய கொடுங்கையூர் பழனியப்பன்(51), வியாசர்பாடி அன்பரசன்(28) ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
லாரியில் திடீர் தீ: மாதவரம் தபால் பெட்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு குப்பை லாரி சென்றபோது, பின்பக்கத்தில் இருந்து கரும்புகை வந்தது. ஓட்டுநர் சரவணன் வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைத்தனர்.
இன்ஜினியரை கடத்திய மர்ம கும்பல்: ஆவடி சேக்காடு காமராஜ் நகரை சேர்ந்தவர் சுதாகர்(29), சிவில் இன்ஜினியர். பட்டாபிராமில் கட்டிடங்களை கட்டி தரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு அரசு பெண் அதிகாரியிடம் தற்காலிகமாக வேலை பார்த்துள்ளார். கடந்த 12ம் தேதி கோயம்பேடு சென்றபோது 4 பேர் கும்பல் அவரை மிரட்டி மதுரை கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து அவரை நிர்வாணப்படுத்தி படம் எடுத்தனர். மேலும், இதை காட்டி மிரட்டி அரசு பெண் அதிகாரி குறித்து கேட்டு மிரட்டினர். பின்னர்  சென்னையில் சுதாகரை விட்டுவிட்டு தப்பினர்.


Tags : Crime , Corpse recovery, firefighter, gold smuggler
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...