தமிழகத்தில் தரமான அரிசி கிடைக்கும் போது எப்சிஐ தரமற்ற அரிசியை கொள்முதல் செய்வது ஏன்?...காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் பேச்சு

சென்னை: தமிழகத்தில் தரமான அரசி கிடைக்கும்போது, அண்டை மாநிலங்களில் இருந்து இந்திய உணவு கழகம் தரமற்ற அரிசியை கொள்முதல் செய்வது ஏன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசியதாவது:  தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புழுங்கல் அரிசி தரம் குறைந்ததாகவும், மக்கள் உண்பதற்கு இயலாத நிலையில் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். புழுங்கல் அரிசி ஆந்திரா மற்றும் தெலங்கானா, மாநிலங்களில் இருந்து பொதுவிநியோக திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

 கொள்முதல் செய்யப்படும் மொத்த அரிசியில் 9.5 சதவீதம் சேதாரம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், அரிசியின் தரம் குறைகிறது ; அரசு பணம் வீணாகிறது. இதன் மூலம் 100 சதவீத கொள்முதல் அரிசியில் 90 சதவீதம் மட்டுமே நல்ல அரிசியாகும். தமிழகத்தில், தரமான அரிசி பொதுச் சந்தையில் தாராளமாக கிடைக்கிற போது தரமற்ற அரிசியினை அண்டை மாநிலங்களில் இந்திய உணவு கழகம் (எப்சிஐ)மூலம் எதற்காக கொள்முதல் செய்ய வேண்டும்? இதை அரசு மறுபரிசீலனை செய்து நல்ல முடிவினை எடுத்திட வேண்டும்.  

அமைச்சர் சக்கரபாணி: உறுப்பினர் தரமான அரிசி வழங்கவில்லை என்று  கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் ெகாண்ட அரிசி ஏற்கனவே கொள்முதல்  செய்துவிட்டனர். இது சம்பந்தமாக குமரி மாவட்ட அமைச்சரும் என்னிடம் புகார் செய்தார். தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, அந்த அரிசி ஆலை முகவர்களை எல்லாம் அழைத்து கலர்சாட் செய்ய சொல்லியுள்ளோம். இந்த மாதத்துக்குள் அதை முடிக்க கூறியுள்ளோம். அதுமட்டுமல்ல துறை சார்ந்த 21 மில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் கலர்சாட் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த அரசு தரமான அரிசியை வழங்கும்.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories:

More