×

அமராவதி அணை மீண்டும் நிரம்பியது: 3வது முறையாக உபரிநீர் வெளியேற்றம்

உடுமலை: அமராவதி அணை மீண்டும் நிரம்பியதால், ஒரே ஆண்டில் 3வது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.
கடந்த ஜனவரியில் காலநிலை மாற்றத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 13ம்தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த ஜூன் மாதம் 63 அடி என்ற அளவுக்கு நீர்மட்டம் குறைந்தது. இதைத்தொடர்ந்து, ஜூலையில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 87.5 அடியாக உயர்ந்து. 5ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் 23ம்தேதி 2வது முறையாக அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் மாலை அணை நீர்மட்டம் 88 அடியை தாண்டியதால், 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை ஒரு ஷட்டர் மட்டும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நேற்று நீர்மட்டம் 88.49 அடியாக இருந்தது. 1023 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. 1190 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே ஆண்டில் 3வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால், அமராவதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amarawati Dam , Amravati Dam replenished: 3rd effluent discharge
× RELATED ஒரே ஆண்டில் 4வது முறையாக அமராவதி அணை மீண்டும் நிரம்பியது