×

கொந்தகை முதுமக்கள் தாழிக்குள் 2 சுடுமண் குடுவை கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுகள் கடந்தும் பளபளப்பு குறையவில்லை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகையில் 8 குழிகள் தோண்டப்பட்டு 26 முதுமக்கள் தாழிகள், 15 சமதளத்தில் இருந்த எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 13 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள மண்டை ஓடு, எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு முதுமக்கள் தாழியை நேற்று திறந்து ஆய்வு செய்தனர்.

அதில், மேற்கத்திய பாணியிலான 2 சுடுமண் குடுவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குடுவைகள் மூன்று அடுக்குகளாக உள்ளன. மேற்புறமும், குடுவை வைக்க பயன்படுத்தப்படும் சுடுமண் பிரிமனை கருப்பு நிறத்திலும், நடுப்புறம் கருப்பு சிவப்பு வண்ணங்களிலும் உள்ளது. 2600 ஆண்டுகள் கடந்தும் பளபளப்பு குறையாமல் முழுமையாக கிடைத்துள்ளன. இதில் ஒரு குடுவையின் மேற்புற மூடி குழியாகவும், மற்றொரு குடுவையின் மேற்புற மூடி சமமாகவும் உள்ளது.

இவை சேதமடையாததால் காலத்தை கண்டறிவது வெகு எளிது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்கக் கூடும். பண்டைய காலத்தில் பராமரிக்க முடியாதவர்களை உணவு, தண்ணீர் தாழியினுள் வைத்து அப்படியே புதைப்பது, வேறு இடத்தில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து வந்து அவர்கள் விரும்பிய பொருட்களுடன் மீண்டும் தாழியினுள் வைத்து புதைப்பது போன்ற பழக்கங்கள் இருந்துள்ளன. தற்போது கிடைத்துள்ள குடுவையில் உணவு வைத்திருந்திருக்கலாம் அல்லது இந்த குடுவையை விரும்பி பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Tags : Discovery of 2 baking pots inside the old man's hut: the luster has not diminished over the past 2,600 years
× RELATED 7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி...