140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: 140நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

1.    சென்னை (நகரம்) வடக்கு சரகத்திலுள்ள வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் உள்ள சில பகுதிகளை தனியாக சேர்த்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல அலுவலகம் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

2.    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ரூ.20 இலட்சம் செலவில் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

3.    பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டுவரும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் வாயிலாக தேசிய நுகர்வோர் நாள் மற்றும் உலக நுகர்வோர் உரிமை நாள் அனுசரித்து நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திட ரூ.50 இலட்சம் செலவிடப்படும்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை

1.    காவல்துறையில் உள்ள நான்கு மண்டலங்களைப் போல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையில் உள்ள இரண்டு மண்டலங்களை நான்கு மண்டலங்களாக்கி திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் புதிய மண்டலங்கள் தோற்றுவிக்கப்படும்.

2.    புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலகுகள் ஏற்படுத்தப்படும்:

3.    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு

ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் கணிப்பொறிகள், துணைக் கருவிகள் மற்றும் படியெடுக்கும் இயந்திரங்கள் புதிதாய் வாங்கப்படும்.

4.    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இன்றியமையாப் பொருட்களின் நகர்வினைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை ஒன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும்.

5.    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டங்களைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ரூ.10 இலட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

1.    ஐந்து, திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்கள் தலா இரண்டு கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

2.    140நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

3.    50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியின் கீழ் ரூபாய்.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

4.    நவீன அரிசி ஆலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நபார்டு வங்கி நிதி உதவியுடனும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிதியிலிருந்தும் ரூபாய்.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

5.    தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும்.

6.    நபார்டு வங்கி நிதியுதவி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதியினைக் கொண்டு ரூபாய்.20 கோடி செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளின் பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு  உட்கட்டமைப்பு  வசதிகள் மேம்படுத்தப்படும்.

7.    புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்காக சொந்த நிதியில் இருந்து ஆண்டு தோறும் ரூபாய் .2.87 கோடிசெலவிடப்படும்.

8.    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

9.    50 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தலா ரூபாய்.20 இலட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கட்டமைப்பு வசதி நவீனமயமாக்கப்படும்.

10.    கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை இயற்கை சேதங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் திறந்தவெளி நெல்சேமிப்பு மையங்களுக்கு மேற்கூரை ரூபாய். 2.50 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கிநிதி உதவியுடன் அமைக்கப்படும்.

11.    தானியங்கி வசதியுடன் கூடிய சைலோ மற்றும் நவீன வசதி அரிசி ஆலை நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய்.100 கோடி மதிப்பில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்.

12.    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை வளாகங்களில் ரூபாய்.37.50 கோடி செலவில் சிமெண்ட் கான்கிரிட் சாலை வசதிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

13.    தானிய பரிசோதனைக் கூடம் நவீன பகுப்பாய் உபகரண வசதிகளுடன் ரூபாய். 7.50 கோடி செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

1.    தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சேமிப்புக் கூடுதலாக 3,400 மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒரு கிட்டங்கி ரூபாய்.5.75 கோடி மதிப்பீட்டில் சொந்த நிதியிலிருந்து நிறுவப்படும்.

2.    தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள

91  பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>