தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகள் மாநகராட்சி, நகராட்சியாக தரம் உயர்வு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சென்னை: தாம்பரம் நகராட்சி பகுதிகள் மாநகராட்சியாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.

தாம்பரம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நேற்று மாநகராட்சியாக தரம் உயர்த்தி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை தாம்பரம் மார்க்கெட்டில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜ் தலைமையில் திமுகவினர், மாநகர பேருந்துகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, நேற்று மாலை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories:

>