×

குளிர்கால கொண்டாட்டம்!

நன்றி குங்குமம் தோழி

வெப்பநிலை ஜீரோ டிகிரிக்கு குறையாமல் இருந்தாலே, ‘எவ்வளவு நல்ல ஒரு தட்ப வெப்பம்!’ என்று சொல்லுமளவுக்குச் சந்தோஷம் பிறக்கிறது இவ்விடத்து வாசிகளுக்கு. இத்தகைய சமயத்தில்தான் பனிக்கட்டிகள் மலைபோல் காணப்படுவதெல்லாம் சிறிது சிறிதாக உருக ஆரம்பிக்கின்றன. அதுவும் பெரிய பனிக்கட்டிகளாக அமைந்து விடுவதால், ஒவ்வொரு வீட்டிலும் ‘கோடரி’ போன்ற துடுப்பால் குத்தி எடுத்து நடைபாதையை சரி செய்துகொள்கிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், உருக ஆரம்பிக்கும் சமயம்தான் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. உறைந்து காணப்படும்பொழுது, நாம் மிகவும் பாதுகாப்புடன் சரியான உடைகளோடு நடந்து செல்கிறோம். உருகும்பொழுது அனைத்து இடங்களிலும் வழுக்கல் ஏற்படும்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே அதுபோல, கொஞ்சமும் கால் வழுக்காமல் நடக்க வேண்டும். பனியில் சறுக்கி விழுவது என்பது மிகவும் ஆபத்தானது. எந்த மாதிரி இடத்தில், எந்தச் சூழலில் எப்படி விழுகிறோம் என்பதுகூட தெரியாது. பலபேர் உருகும் நிலையில் கீழே விழுந்து கைகால்களை இழந்திருக்கிறார்கள். பனிக்கட்டிகளை ஒருவர் உடைத்துக் கொண்டு இருந்தார். திடீரென்று சிறிது நேரத்தில் ‘ஐயோ!’ என்ற சப்தம். பனிக்கட்டிகளை உடைத்துக் கொண்டு இருந்தவர், கால் வழுக்கி நிலை தடுமாறி விழுந்திருந்தார். அவ்வளவுதான், என்ன ஒரு துடிப்பு! பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கீழே விழுந்தவரால், உடனடியாக தோள்களை உயர்த்த முடியவில்லை.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். தோள்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், குணமாகி அவர், பழைய நிலைக்குத் திரும்ப சுமார் ஆறு மாதங்களாகும் என்றார்கள். இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர், மருத்துவத்துறையில் பணிபுரிபவர், இங்குள்ள சூழல்கள் தெரிந்து புரிந்து செய்யும்பொழுதே இவ்வளவு ஆபத்து என்றால், குளிருக்கு பயப்படும் நமக்கு எப்படியிருக்கும்? இப்படிப்பட்ட நிலையிலும், குளிரைக் கொண்டாடுகிறார்கள் என்றால் எவ்வளவு அற்புதம். இந்த மாதிரி எதையும் ரசித்துக்கொண்டாடும் மனப்பக்குவம் இருந்துவிட்டால், நமக்கு எந்நாளும் பொன்னாள்தானே! வெளியில் தலைகாட்ட முடியாத பனிமழையைக்கூட திருவிழாவாகக் கொண்டாடுவதை இங்கு கண்கூடாக காண முடியும்.

‘ஐஸ் திருவிழா’, ‘குளிர்கால  சந்தை’, ‘ஏரியின் உறைபனியில் நடப்பது’ என அனைத்தையும் திருவிழாக்களாக மாற்றிவிட்டால், கொண்டாட்டங்கள் வரத்தானே செய்யும். குளிர்கால அத்தகைய நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாகவே இங்கு மக்கள் கொண்டாடுகிறார்கள். மழை நாட்களில் கால் செருப்பைக்கூட போட்டு வைக்க வெளியில் இடம் வேண்டும். ஈரத்துடன் வீட்டிற்குள் எடுத்துச்செல்லவும் முடியாது. அப்படியே விட்டாலும் ஈரம் சேர்ந்து காளான் வாடை வீசும். அப்படியிருக்கும்பொழுது, பனி மழைக்குப் போட்டுக்கொள்ளும் ‘லெதர்’ ஜாக்கெட்டுகளை சுமந்துகொண்டு மற்றொருவர் வீட்டிற்கோ, விருந்து உபசாரங்களுக்கோ, வேறு விசேஷங்களில் எப்படி பங்கெடுப்பார்கள் என்ற கேள்விக்கான விடையும் கிடைத்தது.

குளிர் என்பதற்காகவோ உறைபனி என்பதற்காகவோ எந்த காரியமும் நிற்பதே கிடையாது. உறைபனி நேரத்தில் நண்பர்கள் வீட்டிற்கு விருந்துக்காக வார இறுதி நாட்களில் செல்வது இங்கு வழக்கம். அதே சமயம் விருந்துக்கு போகும் போது பனிக்கான ஜாக்கெட் அணியாமல் வெளியே செல்ல முடியாது. எல்லாவற்றையும் அணிந்து சென்றாலும் எங்கு கழட்டுவது? அதற்கான வசதியினையும் ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து வீடுகளிலும் முன்புற வரவேற்புப் பகுதியில் ஒரு சிறிய அறை போன்றோ, ஒரு அலமாரிப் பகுதியாகவோ பிரிக்கப்பட்டிருந்தது. அதனுள் முழுவதும் நாம் அணிந்து செல்லும் ஜாக்கெட்டுகளை மாட்டவும், ‘பூட்ஸ்’களை அடுக்கி வைக்கவும் அழகாக பிரிக்கப்பட்டிருந்தது. வருபவர்கள் நேரே சென்று அங்குதான் உடைமைகளை வைக்கிறார்கள்.

பிறகு கிளம்பும் பொழுது, அனைத்திலும் நீர் வடிந்து கிட்டத்தட்ட உலர்ந்து விடுகிறது. இதனால் அவரவர் ஜாக்கெட்டுகள் மற்றும்  ‘பூட்ஸ்’களை அணிந்து கொண்டு செல்ல வசதியாகவும் இருந்தது. குளிர்காலத்தில் எப்போது வெளியே சென்றாலும், அதற்கான அனைத்து துணிகளையும் அணியாமல் வெளியே செல்ல முடியாது. இந்த துணிகளை எல்லாரும் ஒரு மிகப்பெரிய முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். குளிர்கால-பனிக்கான உடை என்றாலே, ஜாக்கெட்டும், பூட்ஸும் நம் கணக்கில் குறைந்தபட்சம் இருபது, முப்பதாயிரம் ஆகலாம். இதை இங்கு ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று ‘செட்’டுகள் வைத்திருக்கிறார்கள். அதனால் அதன் பராமரிப்பும் அவசியமாகிறது.

குளிர்காலம் முழுவதும் முடிந்து, பனிக்கட்டிகள் உருகி, தரை தெரிய ஆரம்பித்தாலே போதும்! உடைகளையும், காலணிகளையும் சுத்தம் செய்து, அதை மிகவும் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துவிடுகிறார்கள். அப்போது தான் அடுத்த ஆண்டிற்கு அதனை பயன்படுத்த முடியும். பனிக்காலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உடலை குளிரில் இருந்து பாதுகாக்கிறார்களோ, அதற்கு நேர்மாறாக கோடையில் அனுபவிக்கிறார்கள். முழுவதும் மெல்லிய ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து, நல்ல நடைப்பயிற்சி. யோகாசனம் என அனைத்து உடற்பயிற்சிகளும் ஆரம்பித்துவிடும். பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலை போதும். கோடை விற்பனை, கோடை கண்காட்சிகள் களைக்கட்ட ஆரம்பித்திடும். இயற்கையின் ஒவ்வொரு மாற்றமும் இங்கு ஒரு திருவிழாக்கோலமாக மாறி விடுகிறது.

விடுமுறை நாட்களை உல்லாசமாகக் கழிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. ‘அதனால்தான் எண்பது வயதானாலும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களோ’ என்று கூட நினைக்கத் தோன்றும். தனிப்பட்ட சுதந்திரம் என்பது அதிகம் காணப்பட்டாலும், கண் பார்வை தெளிவாக இருக்கும் வரை வண்டி ஓட்டுவதிலும், தனியே சென்று பொருட்கள் வாங்குவது போன்றவற்றை வயதானவர்கள் செய்வதை இங்கு வெகு இயல்பாகவே  காணமுடியும். குளிர்காலம் என்பதால், யார் கோயில்களுக்கெல்லாம் சென்று வலம் வருவார்கள் என்று நினைக்க வேண்டாம். சில சிறப்பு நாட்களில் இங்குள்ள கோயில்களுக்குச் சென்று வருவதுண்டு. கோயில்களில் கூட சிறப்புக் கம்பள வரவேற்புதான் என்று சொல்லலாம். நிறைய கோயில்கள் முதல் மாடியில் அமைந்திருப்பது போன்று காணப்படும்.

காரணம் அடித்தளம் முழுவதும் வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. இவ்வளவு பனிக்கட்டிகளில் நடந்து உள்ளே செல்ல வேண்டும். வண்டிகள் குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்ல முடியும். அவ்வளவு சிரமப்பட்டுத்தான் வண்டி நிறுத்த இடம் பிடிக்க வேண்டும். இடம் பிடிக்கவே மூன்று நான்கு முறை வலம்வர வேண்டும். சில நேரங்களில் பொறுத்திருந்து காலியாகும் இடத்தில் வண்டியினை நிறுத்த வேண்டும். ஆக மொத்தம் என்னதான் அடாது பனி பெய்தாலும் விடாது கோயில் பயணம். கோயில்களில் மினியாபோலிசில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் பார்க்கலாம். கோயிலின் அடித்தளம், முழுதும் அழகழகான அறைகள். அறைகள் முழுவதும் விஸ்தாரமான அலமாரிகள்.

அதில்தான் அனைவரும் தாங்கள் அணிந்து வந்த ‘பூட்ஸ்’, ஜாக்கெட்டுகளை அடுக்கி வைக்க வேண்டும். பொறுமையாக, ஒவ்வொருவரும் தங்கள் உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டு அமைதியாகச் செல்லும் காட்சியினை அங்கு காணலாம். உள்ளே மேல் நோக்கிச் சென்றவுடன் தான் தெரிந்தது, இவ்வளவு இந்தியர்கள் இங்குள்ளார்கள் என்பது. ‘புளியோதரை’ மணம் நம்மை இந்திய மண்ணுக்கு இழுத்துச்சென்றது. சென்னை ‘பார்த்தசாரதி’  பெருமாள் கோயில் ஞாபகத்திற்கு வந்தது. விக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஜொலித்தன.‘அழுக்கு’ என்பது பெயருக்குக்கூட கிடையாது. ஒரு இலை, தூசி, பூ என எதுவுமே தரையில் கிடையாது. ‘கார்ப்பெட்’ புத்தம் புதிதாகவே காணப்பட்டது.

ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட இடத்தில் அழகுற அடுக்கப்பட்டிருந்தது. எண்ணெய் விளக்குகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், துளிகூட எண்ணெய் சிந்தாமல் அழகாக எரிந்து கொண்டிருந்தன. மற்ற ஊர்களைப் போலில்லாமல், சனி, ஞாயிறு முழுவதும் கூட இங்கு கோயில்கள் திறந்துள்ளது. அதிக பனி மழை பெய்யும்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்தச் சமயம் மக்கள் வருவது சிரமம் என்பதால் கோயில்களும் மூடுகிறார்கள். சனி, ஞாயிறுகளிலும் விசேஷ நாட்களிலும் முழு நேரம் கோயில்கள் திறப்பதால், அவரவர் வசதிப்படி எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் சென்று வரலாம்.

திவ்யமான தரிசனத்துடன், பிரமாதமான பிரசாதமும் தரப்படுகிறது. பொங்கல், புளியோதரை இல்லாவிட்டாலும், தீர்ந்துவிட்டாலும் கைநிறைய பாதாம், முந்திரி, திராட்சை அல்லது ‘வால்நட்’ போன்றவை பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதிலும் இங்குள்ள வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும்! பழம்கூட பார்க்க அழகு. சாப்பிட மிகவும் ருசி. அதுவும் பல சமயங்களில் தாராளமாகக் கிடைக்கும். இது மட்டுமா? யுகாதி, வருடப்பிறப்பு போன்ற தினங்களில் என்ன ஒரு விருந்து தெரியுமா? கோயிலைச் சார்ந்தவர்கள், மற்றும் அங்கத்தினர்கள், கோயில்களுக்கு வரும் பக்தர்கள் என அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான உணவை சமைத்து, அதற்கென ஒதுக்கப்பட்ட மேசைகளின் மீது அடுக்கி வைப்பர்.

அப்படியான பதார்த்தங்களை நாம் பார்த்திருக்கக்கூட முடியாது. அற்புதமான அறுசுவை உணவு வகைகள் சுடச்சுட, மணக்க மணக்க நம் வயிற்றுக்கு விருந்தளிக்கும். அளவில்லா உணவினை ஆசை தீர உண்ணலாம். உடன் மனதிற்கு தெய்வ தரிசனச் சிறப்பு. வயிற்றுக்கு விருந்து, திரும்பிச்செல்லும்பொழுது ஆத்ம திருப்தியுடன் அனைவரும் கூடிக்கொண்டாடிய களிப்பின் உற்சாகம். இத்தகைய சில நாட்களில் அனைத்தும் இலவசம். குலோப்ஜாம் முதல் கூட்டுப்பொரியல் வரை இந்திய உணவின் ருசி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும். சில நாட்களில் குறைந்த கட்டணத்திலும் நமக்குக் கிடைக்கும். பெற்றோரைப் பிரிந்து, கல்விக்காக இங்கு தங்கியுள்ள நம் இந்திய மாணவர்களுக்கு இது
போன்ற சமயங்கள் தாய் கை மணத்தை நினைவுபடுத்தும் என்றே சொல்லலாம்.

ஒருசிலர்  தங்கள் வசதிப்படி வீட்டிலேயே தின்பண்டங்கள் தயாரித்து, அழகாக பார்வைப்படுத்தி பொட்டலங்களாக கொடுத்து விடுகின்றனர். அவை விற்பனைக்கும் வைக்கப்படுகிறது. பார்த்தாலே நம் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும். சிறிது நேரத்தில் அவை அனைத்தும் காலியாகி விடும். விற்பனைப் பணம் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துவிடுகிறார்கள். நம் நாட்டிலிருந்து இங்கு குலம் பெயர்ந்தவர்கள், நம் பாரம்பரிய உணவுகளை சமைத்து வெளிப்படுத்துவது நம்மை தாய் நாட்டிற்கே திரும்பவும் கூட்டிச் சென்றது. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தால், நம் பாரம்பரியமும் கலாச்சாரமும் உலகம் முழுவதும் நிறைந்துதான் கிடக்கிறது என்றே சொல்லலாம். மக்களுக்கு விசேஷ நாட்களில் அன்னதானம் கொடுப்பது மட்டுமல்லாமல் இங்கு, சிட்டுக்குருவிகளுக்கென்று பெரும்பாலான வீடுகளில் உணவு வைக்கப்படுகிறது.

ஒரு மரத்திலிருந்தோ, ஒரு தூண் போன்ற அமைப்பிலிருந்தோ ஒரு பாத்திரம் போன்ற அமைப்பு தொங்கவிடப்பட்டு, அதில் தானியங்கள் நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது. வண்ணமயமான அழகழகான குருவிகள் கூட்டம், கூட்டமாக வந்து உணவைக் கொத்திச் செல்லும் அழகினை பார்க்க இரண்டு கண்கள் மாளாது. அடுக்கு மாடிக் கட்டடங்களில்கூட அதற்கேற்ற அமைப்பில் பறவைகளுக்கு  உணவு அளிக்கப்படுகிறது. சிறு பிள்ளைகளும் இவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ளுகிறார்கள். குளிர்காலத்தில் பனிக்கட்டிகளை தூக்கி எறிந்து விளையாடும் குழந்தைகள், வெயிலைப் பார்த்ததும், பட்டம் விட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைப் பார்ப்பதும் அழகுதான்.

- சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags : Winter Celebration ,
× RELATED குளிர்கால கொண்டாட்டம்