×

லீட்ஸ் டெஸ்ட் அணியில் மாற்றம் செய்ய எந்த காரணமும் இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

லீட்ஸ்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3வது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: லார்ட்சில் இறுதி நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் என்ன நடந்தது என்ற விவரங்களை வெளிப்படுத்த வேண்டியதில்லை ஆனால் அந்த வாய்மொழி சண்டை அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்தது. நாங்கள் வெற்றி பெற ஒன்றாக விளையாடுகிறோம்.

சிராஜ் திறனுள்ள பந்துவீச்சாளர். அவரின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் நான் அவரை நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எந்தவொரு நிலையிலிலும் எந்தவொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறார். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். ரோகித்சர்மா-கே.எல். ராகுல் இந்த தொடரில் சிறப்பாக தொடக்கம் வழங்கி உள்ளனர்.

அவர்கள் அதே வழியில் தொடருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கம். ஹெடிங்லியில் இந்தியாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். தற்போதைய வீரர்கள் யாரும் இதுவரை இங்கு டெஸ்ட் விளையாடவில்லை. வெற்றி பெற்ற இந்திய அணியின் வின்னிங் காம்பினேஷனை மாற்ற விரும்பவில்லை. அணியில் மாற்றம் செய்வதற்கான எந்தவித காரணமும் இல்லை. இருப்பினும் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து மாற்றம் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள் இல்லாததால் இந்தியா தொடரை வெல்ல வாய்ப்பா என்ற கேள்விக்கு, பதிலளித்த கோஹ்லி, ‘முக்கிய வீரர்கள் விளையாடும் போது கூட, எங்களால் வெல்ல முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். எதிரிகள் பலவீனமாக இருக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்’, என்றார்.

டேவிட் மாலனால் பலம் கூடி உள்ளது
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் கவன சிதறல்கள் ஏற்படுவது சகஜம்தான். அதில் இருந்து விலகி சகஜமான கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம். இந்த முறை இந்திய அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும். ஆனால் நாங்கள் சிறப்பான முறையில் விளையாட எதிர் நோக்கியுள்ளோம். டேவிட் மாலனால் எங்களுக்கு டாப் ஆர்டரில் பலம் கூடியுள்ளது. பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் டேவிட் மாலன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கிறேன்’’, என்றார்.

Tags : Leeds ,Virat Kohli , No reason to change Leeds Test squad: Interview with captain Virat Kohli
× RELATED சில்லி பாயின்ட்…