×

கண்டமங்கலம் அருகே போலீஸ் போல் நடித்து ₹40 லட்சம் இன்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரியை கடத்திய கும்பல்-சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

திருபுவனை : கண்டமங்கலம் அருகே போலீஸ் போல் நடித்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள டேங்கர் லாரியை கடத்திய 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் பகுதியில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு சென்னையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் லிட்டர் இன்ஜின் ஆயில் நிரம்பிய டேங்கர் லாரியை மதுரையை சேர்ந்த விமல் காந்தன் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது டேங்கர் லாரியை வழிமறித்து மர்ம நபர் ஒருவர் தான் போலீஸ் என்றும், லாரியை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி லாரியில் ஏறி அமர்ந்து கொண்டார். பின்னர் அவர் லாரியை விழுப்புரத்திற்கு ஓட்டுமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன லாரி டிரைவர் லாரியை விழுப்புரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். மதகடிப்பட்டு அருகே லாரி சென்று கொண்டிருக்கும் போது வழியில் இரண்டு நபர்கள் லாரியில் ஏறிக்கொண்டனர். அப்போது அவர்கள் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

அதன்பிறகு விழுப்புரம் சென்றதும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக தனியார் ஓட்டல் அருகே லாரியை நிறுத்திவிட்டு லாரியில் இருந்த ஆயிலை விற்பது தொடர்பாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.இதனை அறிந்த டிரைவர் விமல்காந்தன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை அறிந்த மர்ம நபர்கள் லாரியையும், டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். விக்கிரவாண்டி போலீசார் லாரியையும், டிரைவரையும் மீட்டு கண்டமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த யஷாத் என்பவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ஆயிலுடன் லாரியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், லாரியை கடத்திய யஷாத்தின் மொபைல் எண்ணை வைத்து கண்காணித்து வருவதாகவும், வெகு விரைவில் அவரை பிடித்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு ஜிபிஎஸ் கருவி

யஷாத் மற்றும் அவரது கூட்டாளிகள் லாரி கடத்தலின்போது, தங்களை யாரும் நெருங்கி விடக்கூடாது என கருதி லாரியில் உள்ள ஜிபிஎஸ் கருவியை உடைத்துள்ளனர். ஆனால் டிரைவருக்கே தெரியாமல் கூடுதலாக ஒரு ஜிபிஎஸ் கருவியை லாரியின் உரிமையாளர் வைத்திருந்துள்ளார். இது யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் லாரி சென்ற இடங்கள் வழித்தடங்கள் பதிவாகியுள்ளது. இதை வைத்து உரிமையாளர் லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்துள்ளார்.

Tags : Kandamangalam , Thiruvananthapuram: Police have nabbed a gang of 4 people near Kandamangalam who pretended to be police and hijacked a tanker lorry worth Rs 40 lakh.
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை