×

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து : முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக 4 அமைச்சர்கள், 34 எம்எல்ஏக்கள் போர்க்கொடி

சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக 4 அமைச்சர்கள், 34 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் அதிகரித்துள்ளது.அம்ரீந்தர் சிங் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவர் தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் அதிருப்தி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தெரிவித்துள்ளனர். சண்டிகரில் அமைச்சர் ராஜேந்திர சிங் பஜ்வா இல்லத்தில் கூடிய அதிருப்தி எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத முதல்வர் அமரீந்தர் சிங்கின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே முதல்வரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இது தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேருடன் 4 அமைச்சர்கள் காங்கிரஸ் மாநில தலைவர் சித்துவையும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சித்துவின் ஆலோசகர்களிடம் காஷ்மீர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் கவனத்திற்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரச்சனை தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்களும் ஆலோசித்த பிறகு கட்சி தலைமையுடன் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் என்று ஹரிஷ் ராவத் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் பஞ்சாப் காங்கிரசில் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில தலைவர் சித்து ஆகியவர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலை கட்சி தலைமை சமீபத்தில் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த நிலையில் முதல்வர் அம்ரீந்தரை பதவி நீக்கக் கோரி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது மீண்டும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

Tags : Punjab ,Amrinder Singh , அம்ரீந்தர் சிங்
× RELATED முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்