ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறப்பு இனிப்பு வழங்கி சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

ஊட்டி : சுற்றுலா  தலங்கள் திறந்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா சார்ந்த  தொழில் மேற்கொள்ளும் கூட்டமைப்பினர் ரோஜா பூங்காவிற்கு வருகை தந்த சுற்றுலா  பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மலைகளின் அரசி என  அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.  தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா  படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் முதுமலை  உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களும் உள்ளன.

இதனை காண நாள்தோறும் வெளிநாடுகள்  மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச்  செல்வது வாடிக்கை. குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும்  கர்நாடகாவில் இருந்து வார விடுமுறை நாட்களில் பல ஆயிரம் பேர் வந்துச்  செல்கின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி இங்கு பலரும் தொழில் செய்து  வருகின்றனர். காட்டேஜ், லாட்ஜ், ரெசார்ட், ஓட்டல்கள், வெம்மை ஆடை கடைகள்  உட்பட பல ஆயிரம் பேர் இந்த சுற்றுலா பயணிகளை நம்பி நீலகிரியில் தொழில்  செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே இந்த தொழில்கள்  அனைத்தும் நடக்கும்.

இல்லையேல் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம்  முடங்கிவிடும். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச்  மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. மேலும்  சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா  பயணிகளை நம்பி தொழில் செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின், கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுறு்றுலா  பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வழக்கத்தை காட்டிலும்  குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர்.

ஆனால், கொரோனா  இரண்டாவது அலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் வேகம் எடுக்கவே, மே  மாதம் முதல் மீண்டும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும்  மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால்,  சுற்றுலா சார்ந்து தொழில் செய்து வந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டனர்.  மேலும், சாதாரண சில்லரை கடை வைத்துள்ளவர்கள், சாலையோர வியாபாரிகள் அன்றாட  வாழ்க்கையை ஓட்டவே சிரமப்பட்டு வந்தனர்.

4 மாதங்களாக எந்த தொழிலும்  மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள்  வருவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், சுற்றுலா தலங்கள் திறக்க  அனுமதியளிக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில், சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என நீலகிரி  மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளும் கூட்டமைப்பு  சார்பில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  

இந்நிலையில், திங்கட்கிழமை முதல் சுற்றுலா தலங்கள், அதாவது பூங்காக்கள்  மற்றும் படகு இல்லம் போன்றவைகள் திறக்க அனுமதித்துள்ளது.

இதனால், கடந்த  இரு நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற சுற்றுலா  தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள்  வருவதற்கு தமிழக அரசு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா தொழில்  சார்ந்த அனைத்து தொழில்கள் மேற்கொள்ளும் கூட்டமைப்பு சார்பில் நேற்று  சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில்  நடந்தது. இதில், ஊட்டியில் பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் வியாபாரிகள்,  காட்டேஜ் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொத்து மற்றும் இனிப்பு  கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில்சுற்றுலா சார்ந்த தொழில் மேற்கொள்ளும்  கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>