ஜோலார்பேட்டை அருகே 2 வயது சிறுமி கடத்தல்-4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார்

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமி மாயமானார். இதுதொடர்பாக 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளையகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் நிக்கிதா(2). நேற்று முன்தினம் மாலை சுந்தரத்தின் சகோதரர் பாண்டியன் என்பவரது வீட்டின் அருகே சிறுமி நிக்கிதா விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது நிக்கிதாவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் பாண்டியன் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாராவது கடத்திச் சென்றார்களா, அல்லது அவர் எங்கு உள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், நேற்று மாலை எஸ்பி சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சாந்தலிங்கம், இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வேலூரில் இருந்து மோப்ப நாய் சிம்பா, திருவண்ணாமலையில் இருந்து மியா வரவழைக்கப்பட்டது. வெள்ளையகவுண்டனூரில் இருந்து லட்சுமி நகர், ஆலமரவட்டம், ஓட்டுக்காரவட்டம் மற்றும் கலந்தரா வரை ஒடிச்சென்று நாய்கள் நின்றுவிட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும், எஸ்பி சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி, திருப்பத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, தாலுகா இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, கந்திலி இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படை அமைத்து காணமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>