×

அரக்கோணத்தில் ‘சிங்க பெண்கள்’ அசத்தல் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகம்

அரக்கோணம் :  அரக்கோணத்தில் பெண்களால் மட்டுமே அஞ்சலகம் ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ என்ற பெயரில் செயல்படுகிறது. இது, இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். மேலும், பல வழிகளில் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

 நாட்டில் எந்த ஒரு இடத்தில் இருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் அதிகபட்சமாக 4 நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலக அலுவலகங்கள் உள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. அஞ்சலகம் (தபால் நிலையம்) என்பது அஞ்சல்களை போடுதல், வாங்குதல், பிரித்தல், கையாளுதல், அனுப்புதல், வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடமாகும். மேலும், துரித அஞ்சல் சேவை, அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள் போன்றவைகள் விற்பனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

பாஸ்போர்ட், அரசாங்க படிவம், பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை என 2 தலைமை அஞ்சலகம் உள்ளது. மேலும், 45 துணை அஞ்சலகங்கள்  செயல்பட்டு வருகிறது. இதில், அரக்கோணத்தில் முன்மாதிரியாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நிர்வகிக்க கூடிய துணை அஞ்சலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த துணை அஞ்சலகம் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அடுத்த ரயில்வே இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் அருகே அசோக் நகரில் உள்ளது.

இது, முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகம் ஆகும். இந்த, அஞ்சலகத்தில் துணை அஞ்சலக அலுவலர் மற்றும் ஊழியர் என பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள், நாள்தோறும் தங்களின்  வழக்கமான பணிகளை மேற்கொள்கின்றனர். அதேபோல், அஞ்சல் தேவைகளுக்காக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். முன்மாதிரியாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண் ஊழியர்கள் கொண்ட அஞ்சலகம் ஏற்படுத்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அரக்கோணத்தில் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Singhal ,Wacky Women ,Arakonam , Arakkonam,Women Postal Employee, Post office
× RELATED தெளிவு பெறுவோம்