×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை

*நேற்று தொடங்கியது


திருச்செந்தூர் : முருகனின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை நேற்று முதல் தொடங்கியது.  தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அர்ச்சகர்கள் பல நூறு ஆண்டுகளாக சம்ஸ்கிருதத்திலேயே வேத மந்திரங்களில் அர்ச்சனை செய்து வந்தனர். இதையடுத்து கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து 1996, 2006ம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் இதற்கான உத்தரவை பிறப்பித்தாலும், அடுத்து வந்த அதிமுக அரசு, தமிழ் அர்ச்சனை திட்டத்தை அமல்படுத்த ஆர்வம் காட்டாததால் இதை பக்தர்களும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், தமிழ் உணர்வாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையேற்று அனைத்து கோயில்களிலும் தமிழ் அர்ச்சனைக்கும், அனைத்து ஜாதியினரை அர்ச்சகர்களாக நியமித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழக அரசின் உத்தரவை ஏற்று இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தமிழ் அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தமிழ் அர்ச்சனையை தொடங்கி வைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ் அர்ச்சனை துவக்க விழா நேற்று நடந்தது. கோயில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் தெய்வ தமிழ்ப்பேரவை நிர்வாகிகள், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர்கள், தமிழ் தேசிய பேரியக்கம், சத்தியபாமா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்த், கோயில் செய்தி தொடர்பாளர் மாரிமுத்து, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

தொடரும் தமிழ் வழிபாடு

திருச்செந்தூர் கோயிலில் பள்ளியெழுச்சி பூஜை, வள்ளி சன்னதியிலிருந்து சண்முகர் சன்னதிக்கு உற்சவரை அழைத்து வரும் போது 7 தமிழ் பாடல்கள் பாடப்படுகின்றன. காலை 7.15 முதல் 8.15 மணி வரை நடைபெறும் பூஜைகளில் திருப்புகழ், தேவார பாடல்கள் பாடப்படுகின்றன. இரவு 9 மணிக்கு பள்ளியறை தீபாராதனையின் போது தமிழ் பாடல்கள் பாடப்படுகின்றன. தமிழக அரசின் உத்தரவுக்கு முன்பே திருச்செந்தூர் கோயிலில் தமிழ் பாடல்கள் பாடப்படுவது ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thrichendur ,Subramanian Swami ,Temple ,Thrichenthur , Tiruchendur,Subramaniyaswami Temple, Tamil Archanai
× RELATED மக்களவை தேர்தலில் பெரும்பான்மை...