திருச்செந்தூர் நாழிக்கிணறில் நீராட பக்தர்களுக்கு திடீர் தடை

திருச்செந்தூர் : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு குறுகிய இடமாக திருச்செந்தூர் நாழிக்கிணறு இருப்பதால் அங்கு நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டு முழுவதும் திருவிழா நடக்கும் இக்கோயிலுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், ரயில் மூலம் வந்து தரிசித்து செல்வர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டிருந்தது.

சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வந்தது. இதுபோல் கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் திருச்செந்தூர் கடலிலும், நாழிக்கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடினர். இந்நிலையில் நாழிக்கிணறு அமைந்துள்ள பகுதி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு குறுகிய இடமாக இருப்பதால் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>