சுகாதார ஆய்வாளர் 49 பேரின் சான்றுகள் போலியானவை: அதிகாரிகள் உடந்தையுடன் மோசடி; போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

திருவண்ணாமலை: சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்த விவகாரத்தில் 49 பேரின் சான்றுகள் போலி மற்றும் தகுதியில்லாதவை என தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிக்காக அவுட்சோர்சிங் முறையில், 2ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் கடந்த ஆண்டு நடந்தது. அதன்படி, செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 54 சுகாதார ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சுகாதார ஆய்வாளராக பணியில் சேர்ந்த பலரும் போலியான மருத்துவ சான்று கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சுகாதார துணை இயக்குநர் சங்கீதா, திருவண்ணாமலை எஸ்பி பவன்குமாரிடம் கொடுத்த புகாரில், போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்கள் அளித்த மருத்துவ கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. அதில், 5 நபர்களின் சான்றுகள் மட்டுமே அரசு நிர்ணயித்த தகுதியுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முறையாக 2 ஆண்டுகள் துணை மருத்துவ படிப்பு முடித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 32 பேர் மருத்துவ படிப்பே படிக்காமல், பாரத் சேவா எனும் நிறுவனத்தில் துணை மருத்துவ படிப்பு முடித்ததாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், 17 பேர் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் 6 மாதம் மற்றும் ஒரு ஆண்டு பயிற்சி முடித்துவிட்டு பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் செய்துள்ளனர்.

எனவே, சான்றிதழ்கள் போலி மற்றும் தகுதியில்லாதது என தெரிந்திருந்தும் பணியில் சேர்த்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories:

>