உரிய காரணங்களுடன் மனு செய்தால் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கத் தயார்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். தற்போது கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், என் மகனுக்கு நீண்ட கால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க அரசு தயாராக உள்ளது.

தமிழ்நாடு அரசு தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் பிரிவு 20ன் படியான காரணங்களைக் கூறி விண்ணப்பித்தால் மட்டுமே பரோல் வழங்க முடியும். மாறாக கொரோனா பரவலை காரணமாக கூறி பரோல் வழங்க முடியாது. இவருக்கு வழங்கினால், இதே காரணத்தை கூறி பலரும் கேட்பார்கள். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உரிய காரணங்களுடன் மனு செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், உரிய காரணத்ைத கூறி நிவாரணம் கோருவது தொடர்பாக மனுதாரர் தரப்பில் முடிவெடுக்க கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: