×

பஞ். தலைவர்களுக்கான நிதி ரூ.1000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்: சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பு:
* 5,780 கி.மீ. நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.2,097 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீர்ப்பாசன தேவைகளை நிறைவேற்றவும், ரூ.1,149 கோடியில் தடுப்பணைகள், உறிஞ்சு குழிகள், கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் சீரமைக்கப்படும்.
* அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 12,525 நூலகங்கள் புதுப்பிக்கப்படும்.
* ரூ.916.75 கோடியில் ஊரகப் பகுதிகளில் சொத்துகளை உருவாக்கி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
* ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000லிருந்து இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு ”முன்மாதிரி கிராம விருது” வழங்கப்படும்.
* ஊரகப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் ரூ.84.68 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* பெண் கிராம ஊராட்சி செயலர்களுக்கான மகப்பேறு விடுப்பினை 9 மாதத்தில் இருந்து ஓராண்டாக உயர்த்தி வழங்கப்படும்.
* சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை வலுப்படுத்த ரூ.188 கோடியில் சுழல் நிதி மற்றும் சமுதாய நிதி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களின் நுண் மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களை பங்கு மூலதனம் மூலம் செம்மைப்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் 36 சிறு தொழில் தொகுப்புகளுக்கு ரூ.10.80 கோடியில் நிதி மானியம் ஏற்படுத்தப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கும் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் உற்பத்தி மற்றும் வருமானத்தினை அதிகரிக்க 100 சான்று பெற்ற விதை உற்பத்தி தொகுப்புகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி ஊக்குவிக்கப்படும்.  
* 5,000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும். ஒரு தொகுப்புக்கு ரூ.6 லட்சம் வீதம் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய 2 லட்சம் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உள்ளூர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய தேவையாக கருதப்படும் பொது உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட வாழ்வாதார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பன்மத்தை பேணிக் காக்கவும் உள்ளூர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.2 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
* கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 25,000 இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அமைத்திடவும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சிகள் அளிக்கவும் ரூ.87.80 கோடி வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு 130 வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் ரூ.1.30 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* 31,900 ஊரக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தொகுப்பு அடிப்படையில் மதிப்புக் கூட்டல் மேற்கொள்ள ரூ.1.86 கோடியில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* ஊரகத் தொழில்களை மேம்படுத்திடவும், ஊரக மகளிர் தொழில் முனைவோருக்கு உரிய சேவைகள் வழங்கிடவும், 30 ஓரிட சேவை மையங்கள் ரூ.7 கோடியில் நிறுவப்படும்.
* சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விற்பனையகம் அமைத்தல், தனி முத்திரை பெறுதல் மற்றும் மின்னணு வர்த்தக இணைய தளம் உருவாக்குதல் போன்றவற்றிற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் வழிவகை செய்யப்படும்.
* சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படும்.
* வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விவரங்கள் பெறுவதற்கு பிரத்தியேக தொலைபேசி உதவி சேவை மையம் தொடங்கப்படும்.


Tags : Minister ,Periyakaruppan , Panchayat Chairman, Finance, Assembly, Minister Periyakaruppan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...