×

ஆப்கான் மக்களை வெளியேற்றுவதில் அமெரிக்கா புயல் வேகம் ரஷ்ய அதிபர் புடினுடன் போனில் மோடி பேச்சு: தலிபான்களுடன் சிஐஏ தலைவர் ரகசிய சந்திப்பு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரும், உள்நாட்டினரும் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வருகின்றனர். அவர்களை இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் விமானங்கள் அழைத்து செல்கின்றன. இவற்றில் தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தை ஆப்கான் மக்கள், குடும்பத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஏற்கனவே அறிவித்தப்படி இம்மாதம் 31க்குள் தனது படையை முழுமையாக வாபஸ் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் நேற்றும் உறுதியாக தெரிவித்தார்.

அதேபோல், பிரிட்டனும் கூறியுள்ளது. அதே நேரம், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், திட்டமிட்டப்படி படைகள் வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது. படைகள் வாபஸ் காலத்தை நீடிக்க பைடன் விரும்பாததால், ஆப்கானில் இருந்து வெளியேற விரும்புபவர்களை அழைத்து செல்வதை அமெரிக்கா புயல் வேகத்தில் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில், அந்நாட்டு விமானங்கள் 21,600 பேரை அழைத்துச் சென்றன. அதே நேரம், அமெரிக்க உளவு பிரிவான சிஐஏ.வின் இயக்குனர் வில்லியன் பர்ன்ஸ், காபூலுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு, தலிபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரதரை கடந்த திங்கள்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ், இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரத்தை வெளியிடவில்லை. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலமாக, ஆப்கான் விவகாரம் பற்றி பேசினார். இது குறித்து மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஆப்கான் சூழ்நிலை குறித்து புடினுடன் பயனுள்ள ஆலோசனை நடத்தினேன். முக்கிய பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் ஒப்புக் கொண்டோம்,’ என்று கூறியுள்ளார்.

ஆபரேஷன் தேவி சக்தி
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள், ஆப்கானிஸ்தானியர்களை அழைத்து வரும் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு `ஆபரேஷன் தேவி சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.

10 பேருக்கு கொரோனா
*  ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்றும், நேற்று முன்தினமும் நாடு திரும்பிய 81 பேரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இனி ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும் அனைவரும் டெல்லியில் உள்ள இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : US ,Modi ,Russian President ,Vladimir Putin ,CIA ,Taliban , Afghan, US, Russian President Putin, Modi
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...