×

கோவிஷீல்டு 2 டோசுக்கு 84 நாள் இடைவெளி ஏன்?: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கோவிஷீல்டு  தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கு 84 நாட்கள் கால இடைவெளி எதற்காக என்று  ஒன்றிய அரசு விளக்கமளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்தியாவில்  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பெரும்பாலும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த 2 தடுப்பூசிகளுமே 4 முதல் 6  வார இடைவெளிக்குள் 2வது டோஸ் போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு  நிலவியது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோசுக்கான இடைவெளி 84  நாளாக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் இடைவெளி இருந்தால் தடுப்பூசியின்  வீரியம் அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.  

இந்த நிலையில் கொச்சியை  சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில் கேரள  உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘எங்களுடைய தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் தேவைக்காக 12 ஆயிரம் டோஸ்  தடுப்பூசி வாங்கி வைத்துள்ளோம். தற்போது 6 வாரங்கள்  கடந்துவிட்டதால் 2வது டோஸ் போட சுகாதாரத்துறையை அணுகியபோது 84 நாள்  இடைவெளிக்கு பின்னர் தான் 2வது டோஸ் போட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

எனவே எங்களது தொழிலாளர்களுக்கு உடனடியாக 2வது  டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது.  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ்  போடுவதற்கு 84 நாள் கால இடைவெளியை நிர்ணயித்தது ஏன்? என்று விளக்கமளிக்க  ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Tags : U.S. Government , Govshield, Gap, Union Government, Notice
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...