காய்ந்து கருகி சருகாகும் மரக்கன்றுகள்: மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது நடப்பட்டவை

மாமல்லபுரம்: இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019 அக்டோர் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்கதாக நிகழ்ச்சிக்காக, சாலைகள் சீரமைப்பு, அழகு செடிகள், குடிநீர் வசதி, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் சாலைகளுக்கு நடுவே அலங்கார செடிகள் என பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. இதனால், மாமல்லபுரம் புதிய பொலிவை பெற்றது. அதிலும், புராதன சின்னங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் இரவு நேரத்தில் ஜொலித்தது. இதையொட்டி, கடந்த 2019 அக்டோபர் 11, 12ம் தேதிகளில் மிகவும் பிரமாண்டமாக காட்சியளித்த மாமல்லபுரம், இரு தலைவர்களின் சந்திப்பை அடுத்து சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

முன்னதாக, இந்த சந்திப்பை ஒட்டி அக்டோபர் 8ம் தேதி முதல் 5 நாட்கள் சுற்றுலா தளங்களை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு முடிந்த பிறகு பழையபடி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடி, ஜின்பிங் பார்வையிட்ட இடங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான தங்களது குடும்பத்தோடு வந்து வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை உள்பட பல்வேறு சிற்பங்களை ரசித்து செல்பி எடுத்து கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இரு நாட்டு தலைவர்கள், வருகையொட்டி மேற்கு ராஜ, பாடசாலை தெரு, கடற்கரைக்கு செல்லும் சாலை, மரகத பூங்கா, ஐந்து ரதம் உள்பட பல்வேறு இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரங்களை பேரூராட்சி ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

மேலும், கடந்தாண்டு பிப்ரவரியில் மாமல்லபுரம் சிற்ப கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது, மாமல்லபுரம் நகருக்குள் இருந்து 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சிற்ப கல்லூரிக்கு எடுத்து சென்று நட்டனர். இந்நிலையில், அர்ச்சுணன் தபசு அருகே உள்ள பாடசாலை தெருவில் இருந்த 25க்கும் மேற்பட்ட மரங்களை ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் அகற்றி, சாலையோர கடை வியாபாரிகள் ஆக்கிரமிக்காத வகையில் கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து வருகின்றனர். இதற்காக, அகற்றப்பட்ட மரங்களை கோயில் நிர்வாகத்தினர் கோயில் வளாகத்தில் நட்டனர்.

 ஆனால், தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்காமல் விட்டதால் காய்ந்து, கருகி போய் காட்சி தருகிறது. இங்கு, வரும் சுற்றுலா பயணிகள் இந்த காய்ந்த மரங்களை பார்த்து, இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்றதற்கான அடையாளமாகவும், வரலாற்று சின்னமாகவும் இருக்க வேண்டிய மரங்கள் காய்ந்து கிடப்பதை கண்டு வேதனை அடைகின்றனர். எனவே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையின்போது மரம் நட்டு தண்ணீர் ஊற்றி எப்படி பராமரித்தார்களோ, அதேப்போல் தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் கோயில் வளாகத்தில் உள்ள மரங்களை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். காய்ந்து கிடக்கும் மரங்களுக்கு புத்துயிர் ஊட்ட பேரூராட்சி நிர்வாகமும், அறநிலைய துறையும், தொல்லியல் துறையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>