கோழி கடை ஊழியரை மிதித்து தாக்கிய காவலர் 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கோழி கடை ஊழியர் ஒருவரை மிதித்து தாக்கிய விவகாரத்தில், காவல் உதவி ஆய்வாளர் சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை கண்காணிக்க பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ மற்றும் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த ஜான் போஸ்கோ, அவரை ஷூ காலால் மிதித்து தாக்கி உள்ளார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து ஜான் போஸ்கோ பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்தில் கடந்த 15ம் தேதி வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.பின்னர், இந்த விவகாரம் குறித்து சென்னைதெற்கு போலீஸ் இணை கமிஷனர் விரிவான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

Related Stories:

>