ஊரக, ஒன்றிய பகுதிகளில் ரூ.150 கோடியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம்

சென்னை: தமிழகத்தில் ரூ.150 கோடி நிதியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் சொத்தாக இருக்கிறது. இந்த பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை பராமரிப்பது ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பு. 2021-22ம் ஆண்டு  முதல் ரூ.150 கோடியில் இந்த பள்ளிகளில் ‘பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்’ மீண்டும் அறிமுகம் செய்யப்படும். ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்,மேலும் நவீன வசதிகளை பள்ளிகளுக்கு வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

* சட்டப்பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள்.

Related Stories:

>