×

ஃபினி ஸ்டிராபிங்கரின் கதை!

நன்றி குங்குமம் தோழி

நாம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பலரில் ஒருவர் தான் ஃபினி ஸ்டிராபிங்கர். ஃபினியின் இருளும் மௌனங்களும் நிறைந்த நிஜ வாழ்க்கைக் கதை தான் ‘Land of Silence and Darkness’. இதுவரைக்கும் நாம் அனுபவித்திராத, உணர்ந்திராத, தெரிந்திராத துயரங்களும், வலிகளும் நிறைந்த ஒரு வாழ்க்கைப் பயணத்துக்குள் அழைத்துச் செல்கிறது இந்தப் படம்.

ஃபினி குழந்தையாக இருந்தபோது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து கீழே தவறி விழுந்து விடுகிறார். விழுந்ததில் தலைப்பகுதியிலும், கழுத்திலும், உடலின் பின் பகுதியிலும் பலத்த அடி விழுகிறது. சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் ஃபினியின் கண் பார்வை பறிபோகிறது. பார்வை
பறிபோன சில வருடங்களில் காதும் கேட்காமல் போய்விடுகிறது. ஃபினியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. அதனால் முப்பது வருடங்கள் தன்னந்தனியே, யாரையும் சந்திக்காமல், யாருடனும் அதிகமாக பேசாமல் வீட்டிலேயே இருக்க நேரிடுகிறது. அம்மா மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த குரூரமான தனிமையிலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை ஃபினி இழக்கவில்லை.

தனக்கு கிடைத்த வாழ்க்கை அர்த்தமுள்ளது என்பதை அவர் அறிந்திருந்தார். முப்பது வருடங்களுக்குப்பிறகு படுக்கையை விட்டு வெளியே வரும் அவர் தன்னைப்போலவே பார்வையில்லாத, காது கேட்காத மனிதர்களை சந்திக்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறார். இந்த தருணங்களில் மட்டும் ‘‘தான் தனிமையை உணருவதில்லை’’ என்கிறார். ஃபினி ஒரு இடத்தில் சொல்கிறார், ‘‘யாராவது என் கைகளைப் பிடித்து தொடு மொழியில் என் மனதோடு உரையாடும் போது மட்டுமே அவர்கள் எனக்கு அருகில் இருக்கிறார்கள் என்பதை உணர்கிறேன். அவர்கள் என் கையை விட்டு விலகிச் சென்று, எவ்வளவு அருகில் நின்றாலும் அவர்கள் ஆயிரம் மைல்களை தாண்டி இருப்பதைப் போன்ற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது.

நான் சிகிச்சைக்காக படுக்கையில் இருந்தபோது நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறேன் என்று சொன்னார்கள். யாருமே வரவில்லை.
இந்த வாழ்க்கை தரும் மகிழ்ச்சியும் ,துயரமும் என்னைப் பெரிதாக பாதிப்பதில்லை. என்னை போன்ற மனிதர்களுக்கு உதவியாக இருப்பதிலும், சந்திப்பதிலும் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர்கிறேன்’’என்கிறார். ஃபினி தன்னைப் போலவே கண் தெரியாத, காது கேட்காத கென்ரிச் என்ற 51 வயதான ஒருவரைச் சந்திக்கிறார். அவருக்கு 35 வயதில்தான் பார்வை போகிறது. காது சின்ன வயதில் இருந்தே கேட்பதில்லை. குடும்பம் அவரை ஒதுக்கி வைக்கிறது. சுற்றியுள்ள மனிதர்களும் அவரை கண்டுகொள்வதில்லை.

அவருக்கும் அம்மா மட்டுமே ஆறுதலாக இருக்கிறார். குடும்பத்தையும் சமூகத்தையும் வெறுத்து ஒதுக்கி, யாருடனும் எந்தவித ஒட்டு உறவுமில்லாமல் ஐந்து வருடங்களாக ஒரு தொழுவத்தில் மாடுகளுடனும், பறவைகளுடனும், மரங்களுடனும் பேசிக்கொண்டும், உறவாடிக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்.
அவர் வீட்டைவிட்டு வெளியே மெதுவாக நடந்து வந்து ஒரு மரத்தை வாஞ்சையுடன் தொடுவார். கொஞ்ச நேரம் அந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் இலையையும் கிளைகளையும் வருடுவார். இந்தக் காட்சியும் அந்த உணர்வுகளும், பின்னணியாக ஒலிக்கும் இசையும் தரும் அனுபவம் அற்புதமானது. மனிதன் தன்னை மறந்து இயற்கையுடன் இயற்கையாக கரைத்துக்கொள்ளும் அந்தக் காட்சி ஓர் அற்புதமான உணர்வையும், அந்த மனிதனை போன்ற பலரின் நிலையையும் நமக்குள் ஆழமாகச் செலுத்துகிறது.

அவரின் முகத்தில் அவர் வாழ்ந்த துயரமான வாழ்வின் சுவடுகளை நாம் பார்க்கும்போது இவரைப் போல பலரை எப்படி இலகுவாக கடந்து செல்கிறோம்? ஏன் இவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? இத்தகைய கேள்விகள் மனதுக்குள் எழுவதோடு படம் நிறைவடைகிறது. ஃபினி தன்னுடைய பயணத்தில் பிறந்ததில் இருந்து பார்வையற்ற, காது கேட்காத, வாய் பேச முடியாத 22 வயதான ஓர் இளைஞனை சந்திப்பார். அவருடன் ‘‘உன்னைப் போலத்தான் நானும்’’ என்று தொடு மொழியில் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். அந்த இளைஞனுக்கு பல விஷயங்களை ஃபினி கற்றுத் தருவார். ஒரு ரேடியோவில் மென்மையாக இசையை ஒலிக்க விட்டு அந்த இளைஞனின் கையில் தருவார்.

அந்த ரேடியோவை தன் இதயத்தோடு அவன் அணைத்துக் கொள்வான். அந்த இசை அவன் முகத்தில் ஒரு பிரகாசத்தைத் தரும். ஃபினி அந்த ரேடியோவை கேட்கும்போது தராமல் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொள்வான் காது கேட்காத அந்த இளைஞன். இசை காதால் கேட்கும் ஒன்றல்ல. இதயத்தால் உணர வேண்டிய அற்புதமான கலை இசை என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரும் தருணம் அது. நமக்கு உணவு எது, தண்ணீர் எது, பேருந்து எது,சாலை எது, குரங்கு எது என்று எல்லாவற்றையும் தெரியும். இதையெல்லாம் என்னவென்றே தெரியாத, இதுவரைக்கும் பார்த்திராத, பிறவியில் இருந்தே பார்வையற்ற, காது கேட்காத குழந்தைகளை ஃபினி சந்திப்பார். அவர்களை தன் குழந்தைகளைப் போல பார்ப்பார்.

அவர்களுடன் உரையாடுவார். வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தருவார். அந்த பரிசுப் பொருட்களை பார்க்க முடியாத அவர்களின் நிலை நம்மையும் அறியாமல் கண்ணீரை வரவழைக்கிறது. இந்தக் கொடிய வாழ்வின் வலியும், வேதனையும் ,துயரமும் நம் முன்னே தோலுரித்து வைக்கப்படும் அந்த காட்சிகள் எந்த கல் மனதையும் கரைய வைத்து விடும் ஆற்றல் மிகுந்தது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் யாருடைய சிறு உதவியும் இன்றி எளிதாக, சுலபமாக கடந்துவிடுகின்ற உணவு உண்பது, குளிப்பது, எங்கேயாவது பயணம் செய்வது, கருத்துகளை பரிமாறிக்கொள்வது போன்றவை கூட அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக, சிக்கல் மிகுந்ததாக, கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதை கேமரா தன்னுடைய மென்மையான நகர்வின் வழியாக நமக்கு காட்டுகிறது.


இவர்களின் மனதில் என்ன மாதிரியான ஆசைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், உணர்வுகள் இருக்கும் என்பதை ஃபினி நம்மிடம் சொல்கிறார். ‘‘நாங்கள் எல்லோருடனும் பேச விரும்புகிறோம், எங்களுடன் உரையாடுங்கள், நாங்களும் உங்களை போலத்தான். எங்களை தனிமைப்படுத்தாதீர்கள், எங்களின் தனிமையில் இருந்து எங்களை விடுதலை செய்யுங்கள்’’ என்பதுதான் அது.

ஃபினி முப்பது வருடங்கள் தனிமையில் இருந்தபோது தான் விரும்பிய, வேண்டிய வாழ்க்கையைத்தான் தன்னைப் போன்றவர்களும் வேண்டியிருப்பார்கள் என்று நினைத்து தன்னுடைய குறையை, நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல், பெற்றோர்களால், உறவினர்களால், சமூகத்தால் கைவிடப்பட்ட தன்னைப் போன்ற பலரைச் சந்தித்து அவர்களுடன் பேசி, அவர்களுடன் பயணம் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து, அவர்களின் வாழ்க்கையில் சில தருணங்களையாவது மகிழ்ச்சிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், நமக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் நேசத்தையும் கொடுக்கிறார். உண்மையில் ஃபினியின் வாழ்க்கை மகத்தான, ஆழமான போற்றதலுக்குரிய ஒன்று. இந்த அற்புதமான படத்தை இயக்கியவர் வெர்னர் ஹெர்சாக்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : Finnie Strobinger ,
× RELATED சாலையோர வியாபாரியை தாக்கிய எஸ்ஐக்கு...