×

புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரிய ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் நேற்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  

இந்த  வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் பிரகாஷ், சட்டசபை நடந்து கொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை. மனுதாரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டி உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்று தெரிவித்தார். மனுவை  விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கான காரணம் நியாயமானதுதான். எனினும் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி இருவரும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai Special Court ,OBS ,EPS ,Pukahendi , Chennai Special Court dismisses OBS, EPS petitions seeking exemption from appearing in person in Pukahendi case
× RELATED கஞ்சா விற்ற 2 பெண்களுக்கு தலா 5 ஆண்டு...