அரசாணை வெளியீடு ஆசிரியர் தகுதி தேர்வு சான்று வாழ்நாள் முழுதும் செல்லும்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று 7 ஆண்டுகளுக்கு பதிலாக, இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2009ம்  ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த சட்டம் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் பெறுகின்ற சான்றுகள் 7 ஆண்டுகள்தான் செல்லுபடியாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. இதை மாற்றி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரிகள் சார்பில் அரசுக்கு கோரி க்கை வைத்து வந்தனர். இதை ஏற்று, தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசின் இலவச குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அரசாணையின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2012, 2013, 2014, 2017 ம ற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றுகள் 7 ஆண்டுகள் செல்லத்தக்கதாக நடைமுறையில் உள்ளது.

இதை மாற்றி இந்த சான்று செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இந்நிலையில், தேசிய  ஆசிரியர் கல்வி நிறுவனம், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றுகள் வாழ் நாள் முழுமைக்கும் நீட்டித்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண் 128/23.8.2021ன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்று வாழ்நாள் முழுமைக்கும் செல்லத் தக்கது என்று ஆணையிடுகிறது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்று இனி, வாழ்நாள் முழுமைக்கும் செல்லத்தக்கது எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதன்மைச் செயலாளர் தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>