×

அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி: அரசு சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டார்.

வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பிரதமர் பரிசாக அளிக்கிறார். 42,000 கி.மீ நீளமுள்ள மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறார். முதலில் வேலைவாய்ப்புகளை பறித்தார். பணமதிப்பிழப்பை அறிவித்தார். தற்போது நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடி விற்கிறார்.

பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். 25 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க பிரதமர் முடிவு செய்துவிட்டார். தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டத்தால் ஏகபோக வர்த்தகம் அதிகரிக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார். காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துக்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஒன்றிய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும். இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதையே ஒழிக்க பார்க்கிறது ஒன்றிய அரசு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு மூன்று பெரு நிறுவனங்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் சிறு, குறு தொழில்துறையே அழிந்துவிடும். சிறு, குறு தொழில்துறை அழிவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது இளைஞர்களின் கடமை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் அரசின் சொத்துக்களை தாரைவார்க்கிறது மோடி அரசு என்று விமர்ச்சித்துள்ளார்.

Tags : Rahul Gandhi , Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...