×

தண்டையார்பேட்டையில் மாவா, ஹான்ஸ் தயாரித்து விற்ற 2 பெண் உட்பட 5 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில்  மாவா தயாரிக்கும் கம்பெனி செயல்ப்படுவதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார் தண்டையார்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள கம்பெனியில் சோதனை நடத்தினர். அங்கு, மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பாலசுப்பிரமணியன்(49)   என்பவரை  போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர், என்னை கைது செய்தால் நடப்பது வேறு, மாவாவையும் பறிமுதல் செய்யக் கூடாது என இன்ஸ்பெக்டருக்கு  மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும், வண்ணாரப்பேட்டை லாயர் சின்னத்தம்பி தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (35), கொடுங்கையூர் சீதாராம் நகரை சேர்ந்த ஆனந்த் (34), வண்ணாரப்பேட்டை இ-பிளாக் பகுதியை சேர்ந்த பொம்மி (எ) அழகம்மாள் (69), ஏ-பிளாக்கை சேர்ந்த சாந்தி (55) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 கிலோ மாவா, 6 கிலோ ஹான்ஸ், ஜர்தா, 200 கிலோ மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்,  130 கிலோ சீவல் பாக்கு, 9 கிலோ இதர பொருட்கள், கிரைண்டர், மிக்ஸி, எடை மிஷின், ஆட்டோ, 2 பைக், 4 செல்போன் மற்றும் 2,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில், முக்கிய குற்றவாளியான பாலசுப்பிரமணி, ஜெயப்பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் உறவினர்கள் என்பதும், இவர்கள் 3 பேரும் மாவா தயாரித்து பொம்மி மற்றும் சாந்தியிடம் கொடுத்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயப்பிரகாஷ் மீது ஏற்கனவே ஏழுகிணறு காவல் நிலையத்தில் மாவா விற்பனை செய்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொம்மி மீது மாவா விற்பனை செய்ததாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுக்கும் மாவா கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? மாவா தயாரித்து  எங்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாவா, ஹான்ஸ், ஜர்தா தயாரித்து விற்பனை செய்து வந்த குற்றவாளிகளை  கைது செய்த இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் மற்றும் போலீசாரை உதவி ஆணையர் ஆனந்தகுமார், துணை ஆணையர் சிவபிரசாத் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Thandayarpet ,Mawa ,Hans , Thandayarpet, Mawa, Hans, 2 girl, arrested
× RELATED குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 165 நபர்கள் கைது