×

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு: பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கம்

1)இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவண்ணம் அனைத்து நகராட்சிகள், பேருராட்சிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள், சந்தைகள், நவீன நூலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் “கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
2)சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நீர் நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக் கூடங்கள் மேம்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட “நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும்.
3)நகர்ப்புர ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில்    ரூ.100 கோடி மதிப்பீட்டில் “நகர்ப்புர  வேலை வாய்ப்புத் திட்டம் என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்படும்.

4)சென்னை நீங்கலாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 74 இலட்சம் வீடுகளில் இதுவரை 39 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  எஞ்சியுள்ள வீடுகளுக்கும் படிப்படியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
5)அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு சொந்தமான குளங்களில் இவ்வாண்டு 600 குளங்கள்                         ரூ.460 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி மேம்படுத்தப்படும்.
6)மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் 300 புதிய கழிப்பறைகள் கட்டுவதுடன் 450 பழைய கழிப்பறைகள் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
7)நடப்பாண்டில், மதுரை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகள், குன்னூர், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, மணப்பாறை, தேவக்கோட்டை, சின்னமனூர், புளியங்குடி, விருதுநகர் ஆகிய நகராட்சிகள் மற்றும் 25 பேரூராட்சிகளில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் பழைய தேக்க திடக் கழிவுகள் அகற்றப்படும்.
8)பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்காக திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் தள்ளுவண்டிகளுக்கு மாற்றாக அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 2,220 மின்கல வாகனங்கள் ரூ.71 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.  இவ்வாண்டு 1494 மின்கல வாகனங்கள் மற்றும் 29 இலகுரக வாகனங்கள் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.
9)மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பொதுமக்களின் நலனுக்காகவும், குறிப்பாக சிறுவர்களுக்காகவும் 3096 விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. நடப்பாண்டில் 552 பூங்காக்கள் ரூ.122 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
10) மாநகராட்சி, நகராட்சிகளில் 400 கி.மீ. மண்சாலைகள்    ரூ.300 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 500 கி.மீ.  மண்சாலைகள் ரூ.325 கோடி மதிப்பீட்டிலும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவண்ணம் மண்சாலைகளை, தார்சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
11)இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஏனைய காரணங்களால் பழுதடைந்த தார் சாலைகள் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 500 கி.மீ. சாலைகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மற்றும்  157 பேரூராட்சிகளில் 292 கிலோ மீட்டர் நீளமுள்ள 194 சாலைகள் மற்றும் 11 பாலங்கள் ரூ.201 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
12)ஆவடி, நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள், 86 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 5.14 லட்சம் தெரு விளக்குகள் எல்இடி போன்ற ஆற்றல்மிகு தெரு விளக்குகளாக ரூ.477 கோடி மதிப்பீட்டில் மாற்றப்படும். மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், தேவையான இடங்களில்  ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1.50 லட்சம் புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
13)அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட வேண்டுமென்ற இவ்வரசின் கொள்கைக்கேற்ப தற்போதுள்ளவற்றுடன் முதற்கட்டமாக நடப்பாண்டில் 75 தகன மேடைகள் ரூ.112.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகன மேடைகளாக மாற்றப்படும்.
14)உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக 20 மார்க்கெட்டுகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்குவதுடன் ஏற்கெனவே திண்டுக்கல், ஓசூர், மாநகராட்சிகள், வாணியம்பாடி, குமாரபாளையம், இராசிபுரம், கரூர், காஞ்சிபுரம், தாம்பரம், சிதம்பரம், மேலூர், கொடைக்கானல், வெள்ளக்கோவில், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, உதகமண்டலம், செங்கோட்டை, பத்மநாபபுரம், குழித்துறை, நாகப்பட்டினம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நகராட்சிகளில் செயல்பட்டு வரும் 20 மார்க்கெட்டுகள், ரூ.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
15) போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளில்                         ரூ.100 கோடி மதிப்பீட்டில் 50 நூலகங்கள் மற்றும் அறிவுசார்மையங்கள் நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும்.
16) பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட 10 பேருந்து நிலையங்கள் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
திருமங்கலம், நாமக்கல், தருமபுரி, திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், மயிலாடுதுறை, கரூர், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகளில் அரசு மானியம், பொதுமக்கள் பங்களிப்பு மூலமாக பல்வேறு பேருந்து நிலையங்கள் செயல்படுத்த ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது.  தற்போது மேற்கூறிய நகராட்சிகளில் பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து புதிய நவீன பேருந்து நிலையங்கள் கட்டப்படும்.  மேலும், கடலூர், மன்னார்குடி, இராணிப்பேட்டை, சங்கரன்கோவில் நகராட்சிகளிலும் மற்றும் ஈரோடு மாநகராட்சியிலும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும்.
17) திருவாரூர், கரூர் நகராட்சிகளில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
18) பாதாள சாக்கடை இல்லாத ஓசூர் மாநகராட்சியில் ரூ.454  கோடி மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.510 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். அருப்புக்கோட்டை, மன்னார்குடி நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப்படும்.
19) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால், இக்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் சிங்கார சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் இவ்வரசால் தீட்டப்பட்டு, இவ்வாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், வேறு பலதிட்டங்களை இணைத்து இப்பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
20) பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகள்  மற்றும்  நடைபாதைகள் ரூ.300 கோடியில் புதுப்பிக்கவும் மற்றும் மறு சீரமைக்கப்படவும் உள்ளன. மேலும் மறு வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய சாலைகள் முதற்கட்டமாக 6 இடங்களில் ரூ.300 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
21)மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை   லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்.
22) சென்னையில்   உலகவங்கி  நிதி  உதவியுடன்   ரூ.120 கோடி மதிப்பீட்டில், 144 சாலைகளில் பழுதடைந்த மழைநீர் வடிகால்களுக்குப் பதிலாக புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும்.
23) சர்வதேச சுற்றுச்சூழல் வசதி நிதியுதவியுடன் ரூ.55 கோடி மதிப்பீட்டில் வடசென்னை - கடப்பாக்கம் ஏரி புனரமைக்கப்படும்.  இதன் மூலம் ஏரியின் கொள்ளளவு 78 மில்லியன் கனஅடி அளவிற்கு அதிகரிப்பதுடன், பொதுமக்கள் பயன் அடையும் வகையில் பூங்கா நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் அமையும்.
24)சென்னை மாநகரில் உள்ள 25 நீர்நிலைகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதனால் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.
25)பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 807 பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் அடுத்த 3 வருடங்களில் பழுதடைந்த கழிப்பறைகள் மறுசீரமைக்கவும் புதிய பொதுக் கழிப்பிடங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரசு - தனியார் பங்களிப்பில் 50 புதிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்படும்.  மேலும்  ரூ.50 கோடி மதிப்பீட்டில் 246 கழிப்பறைகள் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
26) பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகளின் கல்வித் தரம் மேம்படுத்தப்படும். சிட்டீஸ் திட்டத்தில் 28 பள்ளிகளில்  நவீன வகுப்பறைகள் அமைக்கப்படுவதுடன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 17 பள்ளிகளில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.  மாணவர்கள் உயர்கல்வி பெற வங்கிக் கடனுதவி முகாம்களும் நடத்தப்படும்.
27) இராயபுரத்திலுள்ள மாடிப்பூங்கா உள்பட 50 பூங்காக்கள்,    ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.  ரூ.25 கோடி மதிப்பீட்டில் பாலங்கள், பாலங்களின் கீழ் பகுதிகள், சாலை மையத்தடுப்புகள், சாலையோரப் பூங்காக்கள் மற்றும் போக்குவரத்து தீவுத் திட்டுகள் போன்ற இடங்களில் செயற்கை நீரூற்று, வண்ண மின் விளக்குகள் அமைக்கப்படுவதுடன் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் கட்டடமும் வண்ண முகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
28) மேலும், விக்டோரியா பொதுக்கூடம் அதன் தொன்மை மாறாமல், பராமரிக்கப்பட்டு, வண்ண முகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
29) பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் மயானங்களில் 10 மயானங்கள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
30) சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், மாநகரை பசுமையாக்கி அழகுப்படுத்த குடியிருப்பு நகர் சங்கங்களுடன் இணைந்து வருடத்திற்கு 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும்.
31) சென்னை மாநகரிலுள்ள 10.94 லட்சம் குடியிருப்புகளில்  8.24 லட்சம்  வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இப்பணிகள் சூன் 2022ல் முடிக்கப்படும். நீலாங்கரை மற்றும் செம்மஞ்சேரியில் குடிநீர் திட்டப்பணிகள் ரூ.89 கோடி மதிப்பீட்டில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும்.  இப்பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படும்.
32)சென்னை மாநகரில் இதுவரை 8.2 இலட்சம் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  தற்போது புதிதாக இணைக்கப்பட்ட 8 பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நவம்பர் 2022ல் முடிக்கப்படும்.  நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் - துரைப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், புழல், மாத்தூர், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, இடையான்சாவடி, சடையான்குப்பம் மற்றும் கடப்பாக்கம் ஆகிய 17 பகுதிகளில் புதிய பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் ரூ.2056 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
33)சென்னைப் பெருநகரில் மையப்பகுதிகளில் தற்போதுள்ள கழிவுநீர் கட்டமைப்பு பழமையானதால் அதனை மேம்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
34)திருவாரூர் மாவட்டம், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், திருவாரூர், கொராடச்சேரி ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 665 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.880 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
35)திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 3,973 ஊரக குடியிருப்புகள் மற்றும் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய இத்திட்டம் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.5800 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 50 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
36) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் நகராட்சி மற்றும் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த 492 வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்கு ஆழியார் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.600 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 5.25 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
37) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், செல்லம்பட்டி, திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களில் உள்ள 795 ஊரகக் குடியிருப்புகளுக்கு வைகை அணையினை நீராதாரமாகக் கொண்டு ரூ.660 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 6 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
38) இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திலுள்ள செம்பேடு மற்றும் 88 ஊரக குடியிருப்புகளுக்கு பாலாறு ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.39 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 54,000 மக்கள் பயன்பெறுவார்கள்.
39)மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.31 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 15,000 மக்கள் பயன்பெறுவார்கள்.
40)கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.127 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்.  இத்திட்டத்தின் மூலம் சுமார் 86,000 மக்கள் பயன்பெறுவர்.
41)திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள 146 ஊரக குடியிருப்புகள், முசிறி, மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களிலுள்ள கூடப்பள்ளி மற்றும் 129 ஊரக குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு மற்றும் தஞ்சாவூர் ஒன்றியங்களிலுள்ள 164 ஊரக குடியிருப்புகளிலுள்ள 3.21 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 1.45 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும், தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஒன்றியங்களில் உள்ள 78 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 2.67 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும், கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திலுள்ள சுமார் 1.10 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, கீழ்வேளூர் மற்றும் நாகப்பட்டினம் ஒன்றியங்களில் உள்ள 749 ஊரக குடியிருப்புகள், நாகப்பட்டினம் நகராட்சி, கீழ்வேளூர் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகளைச் சார்ந்த 5.14 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும் கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து கமுதி மற்றும் கடலாடி ஒன்றியங்களில் உள்ள 138 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 64,000 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
42) இவ்வாறு மகத்தான பணிகளை ஆற்றி வரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், பணியாளர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய காலிப் பணியிடங்கள்  தேவைக்கேற்ப, நிரப்பப்படும்.
43) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும்.  2021-ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது.  எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புரத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புரங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாக கருதப்படுகிறது.
தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போதுள்ள   நகர்ப்புர   உள்ளாட்சிகளைச்   சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புரத்தன்மை, மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புரமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது.

 புதிய மாநகராட்சிகள்
1. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனாகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
விரிவாக்கம்
2. திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.

புதிய நகராட்சிகள்
3. பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள்,  அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும்.  மேலும், புஞ்சை புகளூர் மற்றும் ஜிழிறிலி புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும்.

அவ்வாறு தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகின்ற ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.  சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடைகின்ற போது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்.

Tags : Tambaram, Corporation, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை...