×

லீட்ஸ் மைதானத்தில் நாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா..! நெருக்கடியில் களம் காணும் இங்கிலாந்து

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3வது டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அதனை தொடரும் முனைப்பில் இந்தியா களம் காண்கிறது. ஓபனிங்கில் கே.எல்.ராகுல்-ரோகித் சர்மா 2 டெஸ்டிலும் சிறப்பான தொடக்கம் அளித்துள்ளனர். கே.எல்.ராகுல் ஒரு சதம், அரை சதத்துடன் 244 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 2 அரை சதத்துடன் 152 ரன் அடித்திருக்கிறார்.

பார்ம் இழந்து தடுமாறிய புஜாரா, ரகானே 2வது டெஸ்ட்டில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடி அணியை காப்பாற்றினர். விராட்கோஹ்லி ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். லோ ஆர்டர் வீரர்களும் ரன் எடுப்பது கூடுதல் பலமாகும். ஷர்துல் தாகூர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் ஆடும் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி உள்ளது. பிட்ச் கடைசி 2 நாட்கள் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அஸ்வினுக்கு இடம் கிடைக்கலாம் என தெரிகிறது. மற்றபடி பெரிய மாற்றம் இருக்காது. பந்துவீச்சில் பும்ரா 12, சிராஜ் 11 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இவர்களுடன் ஷமியும் இணைந்து மிரட்டி வருகிறார். மறுபுறம் இங்கிலாந்து அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 2வது டெஸ்ட்டில் வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாளில் மோசமான பந்துவீச்சு, பேட்டிங்கால் தோல்வியடைந்தது. கேப்டன் ஜோ ரூட் மட்டும் 2 சதத்துடன் 386 ரன் எடுத்துள்ளார். பேர்ஸ்டோ, பட்லர் என மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இதனால் பேட்டிங் பரிதாபமான நிலையில் உள்ளது.

தற்போது ஓபனிங்கில் வலு சேர்க்க மாலன் இணைந்துள்ளார். பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் ஆண்டர்சனையே பெரிதும் நம்பி உள்ளது. அவர் 9 விக்கெட் எடுத்திருக்கிறார். ராபின்சன், சாம்கரன் பெரியதாக சாதிக்கவில்லை. மார்க்வுட் காயத்தில் இருந்து மீளாத நிலையில் விலகி உள்ளது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒருசில மாற்றங்களுடன் இங்கிலாந்து களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்திய உத்தேசஅணி: கே.எல் ராகுல், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ரிஷப் பன்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா அல்லது ஜடேஜா/ஷர்துல் தாகூர்.

Tags : Leeds Ground ,India ,UK , 3rd Test starts tomorrow at Leeds Ground: India on the verge of winning ..! The UK sees the field in crisis
× RELATED இங்கிலாந்து மேயராக சென்னை தமிழ் பெண்