சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தெரிவிக்காத 231 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தாத 231 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தனியார் மருத்துவமனைகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் கடந்த 13ம் தேதி நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நபர்கள், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்கள் மற்றும் கோவிட் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனைகளிலிருந்து 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சியின் gccpvthospitalreports@chennai corporation.gov.in, mailto: gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களை அவ்வப்பொழுது கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை வழங்காமலும், மருத்துவமனை வளாகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்காமலும் இருந்த மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 231 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>