×

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு!: தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரபூர்வ தகவல்..மக்கள் அச்சம்..!!

சென்னை: சென்னை நகரின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருப்பது சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. சென்னை - ஆந்திராவை ஒட்டிய வங்க கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ கிழக்கு திசையில் வங்கக்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் சரியாக 12:35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னையில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து, நிலப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பது அண்மை காலத்தில் இதுவே முதன்முறையாகும். இந்த நிலநடுக்கம் காரணமாக மீனவர்கள் தற்போதைக்கு வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chennai City ,National Seismic Monitoring Center , Chennai, Earthquake, National Seismic Monitoring Center
× RELATED சென்னை மாநகரில் சட்டவிரோதமாக...