×

புதிய ஹால்மார்க் விதிகளை கண்டித்து நகை வியாபாரிகள் அறவழி போராட்டம்-கடைகளை அடைத்து எதிர்ப்பு

ராமநாதபுரம் : ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதபுரம், சிவகங்கையில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். நகை கடைகள் மூலம் விற்கப்படும் தங்க நகைகளுக்கு, இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை இந்திய தர நிர்ணய ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது. புதிய முறையில் நகை வாங்குவோரின் தனி விபரங்களை அளிக்க வேண்டி வருவதால், தனி நபர் ரகசியம் காக்கும் உரிமையை மீறுவதுடன் அவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும்.

எனவே இப்புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் மற்றும் பான் புரோக்கர் உள்பட 300 கடைகளை நேற்று காலை இரண்டரை மணி நேரம் மூடி அறவழி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ராமநாதபுரம் தங்கம், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன், செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறினர்.

பொருளாளர் சிவக்குமார், தமிழ்நாடு சம்மேளனம் போஷகர் வாசுதேவன், இணை செயலாளர்கள் ஹரிகரன், ராஜசேகர், பிரபாகரன், துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் தேவகோட்டை நகைக்கடை வர்த்தக சங்கத்தினர் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Hallmark , Ramanathapuram: Gold and silver jewelery in Ramanathapuram, Sivagangai, protesting against the new hallmark rules introduced by the United Kingdom.
× RELATED ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நகைக் கடைக்காரர்கள் நாளை ஸ்டிரைக்