×

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மாதம் ₹20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்-சித்தூரில் ஆஷா ஊழியர்கள் தர்ணா

சித்தூர் : சித்தூரில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மாதம் ₹20 ஆயிரம் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டம் செய்தனர்.
சித்தூர் மாவட்ட சுகாதார துறை அலுவலகம் முன்பு ஆஷா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சைதன்யா கலந்து கொண்டார்.  

அப்போது, அவர் பேசியதாவது: ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற உடன் ஆஷா ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை சம்பள உயர்வு வழங்க வில்லை. இதுகுறித்து பலமுறை ஆஷா ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட போதும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் ஆஷா ஊழியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆஷா ஊழியர்களுக்கு மாதம் ₹20 ஆயிரம் சம்பளம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் இதுவரை மாநில அரசு கடைபிடிக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே மாநில அரசு உடனடியாக அரசு ஊழியர்களுக்கு மாதம் ₹20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் காலத்தில் ஆஷா ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பொது மக்களுக்காக சேவை செய்தார்கள். ஆனால் மாநில அரசு அவர்களின் சேவையை மதிக்கவில்லை. அதேபோல் ஆஷா ஊழியர்களுக்கு அரசிடமிருந்து வரும் நல திட்டங்கள் அனைத்தையும் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து கேட்டால் நீங்கள் அரசு ஊழியர்கள் என்று தெரிவிக்கிறார்கள். ஆஷா ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தால் தானே அரசு ஊழியர்கள். ஆனால் பணி நிரந்தரம் செய்யாமலேயே அரசு ஊழியர்கள் என தெரிவித்தது அரசிடமிருந்து வரும் நலத்திட்டங்களை வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் ஆஷா ஊழியர்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் அதேபோல் ஈஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பிடித்தம் இருக்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஆஷா ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல்  வருடத்திற்கு மூன்று  ஜதை  சீருடைகள், முகக்கவசம், கிருமி நாசினி, தரமான கை உறை உள்ளிட்டவை வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக ஏற்க வேண்டும். இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுடன் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் ஏராளமான ஆஷா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Asha ,Supreme Court , Chittoor: Asha employees staged a protest in Chittoor yesterday demanding payment of மாதம் 20,000 a month as per the Supreme Court order.
× RELATED இ-சேவை மையங்களில் எல்எல்ஆர் பெற விண்ணப்பம்