அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டியில் ஊர்வலமாக திரண்டு வந்து ஆர்டிஓவிடம் மனு-குடும்பத்துடன் பங்கேற்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி பகுதியில் மாட்டுவண்டி மணல்குவாரி அமைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக திரண்டு வந்து ஆர்டிஓ விடம் மனு கொடுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் இணைந்து குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்து மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஏஐடியூசி ஒன்றிய தலைவர் குமார் தலைமை வகித்தார். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அழகுமன்னன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க அறந்தாங்கி ஒன்றிய தலைவர் அய்யமுத்து, ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் அறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்தனர்.பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை ஆர்டிஓ சொர்ணராஜிடம் வழங்கினர்.

போராட்டத்தில் விஜயபுரம், மங்கள்நாடு, கொடிவயல், குறிஞ்சாங்கோட்டை, சுப்ரமணியபுரம், ராஜேந்திரபுரம், மாத்தூர், பாலகிருஷ்ணாபுரம், ஆயிங்குடி, மாத்தூர், அரசர்குளம், கொன்னக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: