×

நீரேற்று திட்டங்களுக்கு அனுமதி பெற்று காவிரி ஆற்றில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்வதாக புகார்: கடந்த ஆட்சியில் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை

ஈரோடு: நீரேற்று திட்டங்களுக்கு அனுமதி பெற்று காவிரியாற்றில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்வதால் கடந்த ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியில் மலூஸி, இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நீரேற்று நிலையங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூர் ராஜ வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு மண்டல மின்வாரிய தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அதில் மேட்டூர் அணையில் இருந்து கரூர் மாவட்ட எல்லை வரை 40க்கும் மேற்பட்ட நீரேற்று பாசனங்கள் உள்ளன.

இதில் விவசாயிகளின் பெயரில் சில நிறுவனங்கள் முறைகேடாக அனுமதி பெற்று காவிரி ஆற்று நீரை திருடி விற்பனை செய்கின்றனர். காவிரி கரையோரம் ராட்சத கிணறுகளை வெட்டி 500 முதல் 1250 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை வைத்து ஊற்று நீருக்கு பதில் ஆற்று நீரை அவர்கள் திருடுகின்றனர். பின்னர் அதை 30 கி.மீ கொண்டு சென்று கோழிப்பண்ணைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் 400 ஆண்டுகால பாரம்பரிய ராஜ வாய்க்கால் நேரடி பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தற்போது கட்டுமான துறையில் சர்ச்சையில் சிக்கிய பிஎஸ்டி நிறுவன தலைவர் தென்னரசுவை தலைவராக கொண்ட அமைப்பின் மூலம் நீரேற்று நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த மின் இணைப்புகளையும் கடந்த ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட நீரேற்று பாசன திட்ட அனுமதியையும் ரத்து செய்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Khaviri River , Cauvery water, theft
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து காவிரி...