மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, இந்த அவைக்கு என்றும் நிரந்தர உறுப்பினர் எங்களையெல்லாம் உருவாக்கிய தலைவர், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியிருக்கும் மாண்பாளர்.   இது மட்டுமல்ல; இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!   என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை, தமிழ் நெறி காக்கும் பாதை, தந்தை பெரியாரின் பாதை, பேரறிஞர் அண்ணாவின் பாதை, அறவழிப் பாதை, அமைதிப் பாதை,  ஜனநாயகப் பாதை, இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்  என்று இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர்  என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

எண்பது ஆண்டு பொது வாழ்க்கை, எழுபது ஆண்டுகள் திரைத் துறை, எழுபது ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தினுடைய தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர் அவர்கள்.  நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும்.   குளித்தலையில் போட்டியிட்டு 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் குனியாத தலை, கலைஞருடைய தலை.  1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என மொத்தம் 13 முறை இந்தச் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி வாகை சூடிய வெற்றி நாயகர் கலைஞர் அவர்கள்.   தோல்வி அவரைத் தொட்டதே இல்லை! வெற்றி அவரைக் கைவிட்டதே இல்லை! அவர்தான் கலைஞர்!. இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது; இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது  என்று போற்றத்தக்க பெருமையுடையவர் கலைஞர் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 10-02-1969 அன்று முதன்முதலில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் கலைஞர்.  அதன்பின்னர், 15-3-1971, 27-1-1989, 13-5-1996, 13-5-2006 என மொத்தம் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்மொழியின் மேன்மைக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய மக்களின் கல்வி, அறிவியல், சமூகப்  பொருளாதார அரசியல் எழுச்சிக்கும் வழிவகுக்கும் மகத்தான திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கி, ஒட்டுமொத்த இந்தியாவிலும், தமிழ்நாட்டை வளர்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக்கியதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பங்கு ஈடு இணையற்றது.

 

இன்று நாம் பார்க்கும் நவீன தமிழ்நாடு என்பது கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு ஆகும். கனவு நகரங்களை சிலர் உருவாக்குவார்கள். கலைஞர் அவர்கள்தான், கனவு மாநிலத்தையே உருவாக்கிய மகத்தான சிற்பி.  நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன் என்று முதல் முறை ஆட்சிக்கு வந்த போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.  சமுதாய சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு இவை மூன்றையும்தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.  அந்த அடிப்படையில்தான் ஆட்சியை நடத்தினார்கள்.   அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர்ந்தன.  அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி; ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்; மகளிருக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம்; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடன் ரத்து; சென்னை தரமணியில் டைடல் பார்க்; சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்; சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம்; தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது; நமக்கு நாமே திட்டம்; அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்; அவசர ஆம்புலென்ஸ் 108 சேவை அறிமுகம்; இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; மினி பஸ்களை கொண்டு வந்தது; உழவர் சந்தைகள் அமைத்தது; ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி; கைம்பெண்கள் மறுமண நிதி உதவி; கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்; பல்லாயிரம் கோயில்களுக்குத் திருப்பணிகள்; அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு; உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு; இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்; மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்; அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரங்கள்; இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது; உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது; நுழைவுத் தேர்வு ரத்து; மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது; சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம்; நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; தெற்காசியாவிலேயே பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை உருவாக்கம்; மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு; ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது; இப்படி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் முதலமைச்சர் கலைஞர்!  

திருக்குவளை என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பிய ஒரு இளைஞனுக்கு தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது; ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது.  திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய மூவரும் அவருக்கு மூச்சுக்காற்றாக இருந்து செயல்பட வைத்தார்கள்.  இந்த மூவரது கனவுகளை நிறைவேற்றும் மாமனிதராகக் கலைஞர் செயல்பட்டார்கள். இலக்கியத்துக்குள் போனால், அவரது குறளோவியமும், சங்கத் தமிழும், தொல்காப்பியப் பூங்காவும் தென்றலாய் வீசுகிறது.  கதைக்குள் பயணித்தால், பொன்னர் சங்கரும், தென்பாண்டிச் சிங்கமும் உறுமுகிறது.  திரையுலகைப் பார்த்தால், அவரது பராசக்தியும் மனோகராவும் பூம்புகாரும் மின்னுகிறது.  நாடகத்துக்குள் நுழைந்தால், தூக்குமேடையும் சாக்ரடீசும், சேரன் செங்குட்டுவனும் ஒலிக்கிறது.  அவரது சிற்பத் திறமைகளுக்குச் சான்றாக வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடி வள்ளுவர் சிலையும் எழுந்து நிற்கிறது.  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாடப்புத்தகம் வேண்டுமா? அவரது உரைகள் இருக்கின்றன.  பத்திரிகையாளர்களுக்கு இலக்கணம் வேண்டுமா? அவர் நடத்திய முரசொலி விரிகிறது.  அரசியல்வாதிகளுக்கு அரிச்சுவடி வேண்டுமா? அவரது கடிதங்களும், நெஞ்சுக்கு நீதியும் இருக்கிறது.  அரசியல் களத்தில் பார்த்தால் அவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.  அதுமட்டுமல்ல; தன்னை வசைபாடியவர்களையும் வாழ்த்தியவர் அவர்.  

இப்படி, கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்த கலைஞர் அவர்கள், 2018 ஆகஸ்ட் 7 ஆம் நாள் நிரந்தர ஒய்வுக்குச் சென்று விட்டார். ஓய்வெடுக்கச் சென்றார் என்று நான் சொன்னாலும்கூட, அவர் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏராளமானவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்.  தான் மறைந்தால், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதச் சொன்ன மக்கள் தொண்டர் அவர்.  ‘அண்ணா! நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில், இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா! நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!’ என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிமொழி எடுத்தவர் அவர்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்களின் எஃகு இதயத்தை நம்பி, நாம் கொடுத்த வாக்கை நம்முடைய உடன்பிறப்புகள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு உறுதிமொழி தந்த உடன்பிறப்புகளின் தலைவர் அவர். அவர் பேரறிஞர் அண்ணாவுக்குக் கொடுத்த வாக்கை அவரது தம்பிமார்களாகிய நாங்கள் காப்பாற்றினோம்.

இப்படி தன்னைத் தந்து, இந்தத் தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும்  என தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

Related Stories:

>