மயிலாப்பூர் கோயில் அறங்காவலர்கள் சஸ்பெண்ட்: விசாரணை நீதிபதி திடீர் விலகல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தான கோயில் அறங்காவலர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கோயில் சார்பாக அதன் டிரஸ்டி ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், அறங்காவலர்களில் ஏற்கனவே 2 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறானது. ஆதிகேசவ பெருமாள் கோயில் தனியார் கோயில். இந்த கோயிலுக்கு எதிராக இந்து அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

எனவே, இதை ரத்து செய்ய வேண்டும்என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி ஆஜரானார். அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணை வாபஸ் பெறப்படும் என்றார். அப்போது நீதிபதி எம்.சுந்தர், வக்கீலாக இருந்தபோது இந்த கோயில் தொடர்பான வழக்கில் ஏற்கனவே நான் ஆஜராகியிருப்பதால் இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறினார். இதையடுத்து, வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதிக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More