×

அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகம் திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு பாழானது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சீர்படுத்துகிற, செம்மைப்படுத்துகிற பணி நடந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் செங்கம் தொகுதி உறுப்பினர் கிரி (திமுக) பேசுகையில், \\” தென்பெண்ணை ஆறு, செய்யாறு ஆகியவற்றை பாலாற்றோடு இணைக்க வேண்டும். அதுவும் இந்த ஆண்டே பணிகளை முடிக்க வேண்டும். செய்யாறு மூலம் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஜவ்வாது மலை அடிவாரத்தில் குப்பணத்தம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு குறிஞ்சி குப்பம் மக்கள் தங்கள் நிலங்களை வழங்கியுள்ளனர். எனவே, அந்த அணைக்கு குறிஞ்சி குப்பம் என்ற பெயரை வைக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்ட சாத்தனூர் அணை பராமரிப்பு இன்றி உள்ளது. அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவின் பெயரில் கழகம் அமைத்து, அண்ணாவின் படத்தை கொடியில் வைத்து ஆட்சி செய்தவர்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ்படுத்திவிட்டார்கள்” என்றார்.

கே.ஏ.செங்கோட்டையன்: நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மேம்பாட்டிற்காக  ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது அவை முன்னவர் என்னை அழைத்து பாராட்டினார். கல்வி தொலைக்காட்சி இந்தியாவிலயே முதல்முறையாக தமிழகத்தில் உருவாக்குகின்ற போது அண்ணா நூலகத்தில் தான் உருவாக்கப்பட்டது. சிவில் சர்வீஸ் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: திருமணத்திற்கு வாடகைக்கு விட்டு, நூலகத்தை பாழடிக்கும் ஒரு சூழ்நிலை உருவானது. அதனால், நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வேறு எந்த நிகழ்ச்சியும், திருமண நிகழ்ச்சி எல்லாம் நடக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில்தான் அவைகள் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் கழக ஆட்சி வந்த பிறகு இன்னும் சீர்படுத்துகிற, செம்மைப்படுத்துகிற அந்த பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு இருக்கிறது என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : AIADMK ,Anna ,Library , Chief MK Stalin, speech
× RELATED திமுகவுக்கு அதிமமுக முழுஆதரவு