×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி கோர்ட்டில் ஆஜராகவில்லை: விடுவிக்க கோரி எஸ்பி புதிய மனுதாக்கல்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில், சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றபோது, தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி அளித்த புகாரின்படி அவர் மீதும், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும், சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, சிறப்பு டிஜிபி, இவ்வழக்கை வெளிமாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த தடையேதும் இல்லையென்றும், சட்டப்படி இவ்வழக்கை விசாரிக்கலாம் என்றும் கூறி அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நேற்று இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. எஸ்பி கண்ணன் மட்டும் ஆஜராகி, தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரியும், வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் கேட்டும் இரண்டு மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் நீதிமன்ற வரம்பிற்குள் வராது என்றும், எனவே இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூடாது என்றும் மனுதாக்கல் செய்தனர். 3 மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாதன், அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 2ம்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Tags : SP ,Special ,DGP , Female SP, sexual harassment, case
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...