×

பெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்!

நன்றி குங்குமம் தோழி

நம் நாட்டில் ஆண்களால் மட்டுமே ஒரு தொழில் நிறுவனத்தை நடத்த முடியும் என்பதிலிருந்து மாறுபட்டு பெண்களும் அவர்களுக்கு இணையாக தொழில் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே  பெரிய நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்ற பெண்கள் சிறுதொழில்களை மட்டுமே நடத்தக்கூடிய நிலையில் தான் இன்றும் உள்ளனர். அவர்களுக்கு தொழில் முனைவோராகும் வழியைக் கற்றுக்கொடுப்பது மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தி அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார் ரூபா சஞ்சய். இவர் ‘சன்ஸ்க்ருதி’ என்ற அமைப்பில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பெண் தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுதான். அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களை எவ்வாறு மக்களிடம் எடுத்துச் செல்வது முதல் அதை சந்தைப்படுத்துவது வரை அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். ‘‘ஒன்பது தோழிகள் ஒருங்கிணைந்து, நமது பெண்கள் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று, வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘சன்ஸ்க்ருதி’ என்ற இந்த அமைப்பு.

சுமார் 30 ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் கல்யாணி தேவநாதன்தான் எங்கள் அமைப்பின் தலைவராக இருந்து வழி நடத்துகிறார். பல பெண்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் இலைமறை காயாகத்தான் இன்றும் இருந்து வருகின்றனர். அந்த பெண்களை மட்டுமே தேடிப் பிடித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் இருக்கிறோம். மேலும் திறமையானவர்களை ஒருங்கிணைத்து, ஊக்கமளித்து, மெருகூட்டி வருகிறோம். நம்மால் முடியும் என பெண்களை உணர வைத்து, அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களுக்கு சுயசம்பாத்தியம் ஏற்படவும் முனைந்து செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களுக்கும் எங்களின் உறுப்பினர்கள் சென்று அங்குள்ள கைவினைப் பொருட்களை கற்றுக்கொண்டு இங்கு பெண்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம். கடந்த வருடம் ஒன்பது உறுப்பினர்களுடன் தான் சன்ஸ்க்ருதி துவங்கியது. தற்போது மொழி, இனம் கடந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் 170 பேர் உறுப்பினர்களாக இதில் இணைந்துள்ளனர். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18 தேதிகளில் பெங்களூரில் பிரமாண்டமான வணிக வளாகத்தில் ‘கின்னஸ்’ உலக சாதனை படைக்கும் பொருட்டு, சுமார் 60-க்கும் மேற்பட்ட நம் அமைப்பு உறுப்பினர்களின் கைகளால் உருவாக்கிய துணி பொம்மைகள் கண்காட்சி நடைபெற்றது.

இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் மட்டும் இல்லாமல், அதற்கான ஒரு பாதையை அமைத்துக் கொடுக்க முடிந்தது. சாதிக்க வயது வரம்பு அவசியமில்லை. எந்த வயதிலும் நம்மால் ஒரு தொழிலினை அமைத்துக் கொள்ளலாம். இது நாள் வரை குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்து வந்தவர்கள் தற்போது, Sanskruthi Doll Makers and Creaters Association (SDMCA) அமைப்பில் இணைத்து அவர்களின் கைவினைப்பொருட்களை கண்காட்சியாக மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அவர்களின் திறமைகளை உலகமெங்கும் சென்றடைய ஏற்பாடும் செய்து வருகிறோம்’’ என்றவர் இதன் மூலம் ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்ய வழியினை ஏற்படுத்தி தந்துள்ளனர்.
 
‘‘ஒரு பெண் தொழில்முனைவோர் செய்யும் கைவினைப் பொருட்களை இந்த இணையத்தில் காட்சிப்படுத்துவதால் அவர்களின் பொருள் ஆன்லைன் மூலமாகவும் விற்பனையாகிறது. அதன் மூலமும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். சென்னை, ஆழ்வார்பேட்டையில், கடந்த செப்டம்பர் 14, 15 தேதிகளிலும் இவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இது போல் மாதம் ஒரு முறையாவது இவர்களின் படைப்பினை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

‘‘எங்க அமைப்பின் முக்கிய நோக்கமே உறுப்பினர்கள் அவர்களின் பொருட்களை மார்க்கெட்டில் எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கொடுப்பது தான். அது மட்டுமில்லாமல் எவ்வாறு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்குகிறோம். மேலும் பல தொழில் முனைவோர்களுக்கிடையே  தொடர்பை ஏற்படுத்தி கொடுப்பது, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவை மொத்த விற்பனைக்கு கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறோம். மொத்தத்தில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதோடு தைரியத்தை கொடுத்து ஊக்கப்படுத்துகிறோ ம். பெண்கள் நினைத்தால் வானம் வசப்படும், வையகமும் நம் கையில் மிளிரும்’’ என்றார் ரூபா சஞ்சய்.

தொகுப்பு: தி.சபிதா ஜேஸ்பர்

Tags : girls ,sky ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்