×

அதிமுக ஆட்சியில் சென்னையில் கனமழை பெய்தபோது செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததா, உபரிநீர் வெளியேறியதா? திமுக உறுப்பினர் நந்தக்குமார், இபிஎஸ் காரசார விவாதம்

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னையில் கனமழை பெய்தபோது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா அல்லது உபரிநீர் வெளியேறியதா என சட்டப் பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் நந்தக்குமார், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அணைக்கட்டு உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் (திமுக) கலந்து கொண்டு பேசியதாவது: 1996ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது, நள்ளிரவில் புழல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் கூட சொல்லாமல் அதிகாலையிலே நேரடியாக அணைக்கே, கலைஞர் சென்று நடவடிக்கை எடுத்ததால் அன்று புழல் ஏரி உடைப்பு தடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது அனைவருக்கும் தெரியும். காரணம், ஒரு முதல்வரோ, ஒரு அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருந்தால் எந்த அணையும் உடையாது.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. தவறான தகவல் கொடுக்காதீர்கள். அது உடையவில்லை. உபரி நீர் தான் வெளியில் வந்தது.
நந்தகுமார்: எதிர்கட்சி தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். உபரிநீரை மட்டும் வெளியேற்றியிருந்தால் எப்படி சென்னை மூழ்கியது. உபரி நீரை எப்போது வெளியேற்றினார்கள்?. உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என்ற அந்த துறையின் அமைச்சரை துறையின் அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, முதல்வர் தான் சொல்ல வேண்டும் என்று சொன்ன காரணத்தால் அங்கே நீர் அதிகப்படியானது.
எடப்பாடி பழனிசாமி: நேற்று கூட சென்னையில் 2 மணி நேரம் தான் மழை பெய்தது. சாலையில் செல்ல முடியாத நிலை. அன்றைய தினம் கிட்டத்தட்ட 60 செமீ அளவுக்கு மழை பொழிந்தது. அப்போது நீர் அதிகமாக ஏரிக்கு வருகிறது. அந்த நீரை வெளியேற்ற வேண்டும். அது தான் சவாலானது. அதுமட்டுமல்ல சென்னை சுற்றியுள்ள அந்த ஏரிக்கு கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதிலிருந்த உபரி நீரும் வருகிறது. அதனால் தான் சென்னை மாநகரம் பாதிக்கப்பட்டதே தவிர எந்த ஏரியும் உடையவில்லை.

நந்தகுமார்: கடந்த ஆட்சியில் சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை முறையாக தூர் வாரியிருந்தால் சென்னை இப்படி தத்தளித்திருக்குமா? தூர்வாரும் பணிகளை முறையாக செய்யவில்லை.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: முந்தைய காலங்களில் மழை பெய்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களால் வெறும் 120 இடங்களில் மட்டுமே இப்போது தண்ணீர் தேங்குகிறது. முந்தைய காலங்களில் நீர்வடிய 15 நாட்களாகும். எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கையால் 3 மணி நேரத்துக்குள் தண்ணீர் வடிந்து வருகிறது.
 செல்வபெருந்தகை (காங்கிரஸ்): நீங்கள் பேசும் செம்பரம்பாக்கம் ஏரி பிரச்னை எனது தொகுதியில் வருகிறது. அன்றைய நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறந்து விட்டார்கள். எப்போது திறந்து விட்டார்கள் என்றால், 4 நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காத்திருந்து அனுமதி பெற முடியாததால் உபரி நீர் அதிகமாகிய நிலையில் ஒரே நாளில் மொத்தமாக திறந்து விட்டார்கள். அதன் தாக்கம் தான் சென்னை வெள்ளத்தில் சூழ்ந்து கொண்டது. அதைத் தான் உறுப்பினர் நந்தகுமார் சொல்ல வருகிறார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி கிடைக்கவில்லை என்று தான் கூறினர். ஒரே நேரத்தில் திறந்து விட்டதால் சென்னை மாநகரம் மூழ்கிவிட்டது. அதற்கு அன்றைய அதிமுக ஆட்சி தான் காரணம்.

எடப்பாடி பழனிசாமி: ஒரு ஏரியில் இருந்து குறிப்பிட்ட நீரை மட்டும் தான் வெளியேற்ற முடியும். அப்படித் தான் அன்றும் நீர் வெளியேறியது. அதை சுற்றியுள்ள 100 ஏரிகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர் மற்றும் சென்னையை சுற்றி மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த நீர் எல்லாம் சேர்ந்து தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதே தவிர செம்பரம்பாக்கம் ஏரியால் மட்டுமல்ல.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: பேரிடர்  மேலா ண்மை குழு கூட்டம் 2015க்கு முன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட கூட்டப்படவில்லை. அதற்கான விதிமுறைகளை ரெடி பண்ணவில்லை என்றும், அன்றைக்கு ஏரியை திறக்க முடிவெடுப்பதற்கு அன்றைய முதல்வரை தொடர்பு கொள்ள முடியாமல், சரியான நேரத்தில் அந்த உத்தரவை பெற முடியவில்லை. இல்லையென்றால் விரைவாக திறக்கப்பட்டிருக்கும் என்றும் சிஏஜி அறிக்கையில் உள்ளது. இதற்கான பதிவையும் இந்த அவையில் வைக்க தயாராக இருக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி: மழைக்காலங்களில் அதிக அளவில் மழை பெய்யும் போது, ஏரிகளை கண்காணிக்கும் அதிகாரிகள், அவர்களாகவே திறந்து விடலாம். அணைகளோ ஏரிகளோ நிரம்பும் போது திறந்து விடுவது வழக்கமான நடைமுறை தான். முதல்வரின் உத்தரவிற்காக காத்திருக்கவில்லை. மழைக் காலங்கள், பேரிடர் காலங்களில் அணை நிரம்பும் போது அணையை திறக்க அதிகாரிகளே முடிவு எடுக்கலாம் தானாக திறந்து விடுவது தான் நடைமுறை. முதல்வர் அனுமதி பெற தேவையில்லை என்றார்.

Tags : Chennai ,Crescent ,Thimam ,Nandkumar ,EPS , Did the Sembarambakkam lake break during the heavy rains in Chennai during the AIADMK regime and did the floodwaters recede? DMK member Nandakumar, EPS Karasara discussion
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...