×

தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து கர்நாடகாவுக்கு 464, ஆந்திராவுக்கு 194 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்­­துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கர்நாடகாவுக்கு 464 பேருந்துகளும், ஆந்திராவுக்கு 194 பேருந்துகளும் நேற்று முதல் இயங்கத்தொடங்கியது. கொரோனாவில் ஊரடங்கின் தளர்வாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை வழங்கியிருந்தார். இதன்படி நேற்று முதல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.  

இதன்படி தமிழகத்தில் சென்னை, சேலம், தர்மபுரி, கோவை, விழுப்புரம், வேலூர்,  திருவண்ணாமலை ,மாதவரத்தில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு, கோலார் தங்கவயல், திருப்பதி,  மைசூர், ஐதராபாத், விஜயவாடா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் ஆந்திரா போக்குவரத்து கழகத்தின் சார்பில் நெல்லூர், கர்ணூல், ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்ேவறு இடங்களுக்கு அம்மாநில பஸ்கள் இயக்கப்பட்டன.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி சாதாரண பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஏசி பஸ்கள் இயக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அண்டை மாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்து தொடங்கியிருப்பது, பொதுமக்களிடத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், ‘முதல்வரின் உத்தரவுப்படி தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து வழக்கமாக ஆந்திராவுக்கு 242 பஸ்கள் இயக்கப்படும். இன்று (நேற்று) 194 பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கர்நாடகாவுக்கு வழக்கமாக 606 பேருந்துகள் இயக்கப்படும். இன்று (நேற்று) 464 பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் அனைத்தும் இயங்கப்படுகிறது’ என்றார்.

* 80 ஆம்னி பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூரு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவுக்கு நாள்தோறும் 600 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டதையடுத்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கான ஆம்னி பஸ் சேவை தொடங்கியிருக்கிறது. முதல்கட்டமாக 80 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் முழுமையாக இயங்காததால், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அப்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றார்.


Tags : Karnataka ,Andhra Pradesh ,Transport Minister , 464 buses to Karnataka and 194 to Andhra Pradesh due to concessions: Transport Minister
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...