×

அவதூறு வழக்கை எதிர்த்த ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை அணுக அனுமதி

சென்னை: தங்கள் மீது தொடரப்பட்டுள்ள, அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இந்த அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு  கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளது.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது. இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் வக்கீல்கள் சி.திருமாறன், கவுதம் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் நீதிபதி நிர்மல்குமார் முன்பு முறையிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும். அதேசமயம், விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று அனுமதி அளித்தார்.

Tags : ICC ,OBS ,EPS , ICC refuses to hear OBS, EPS petitions against defamation suit as urgent case: MPs, MLAs allowed to approach court
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...