×

விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: நீர்வளத்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், தமிழ்நாட்டில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெற செய்தல், மேம்படுத்துதல் மற்றும் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தல் ஆகியவை திட்டத்தின் பிரதான நோக்கமாகும். மேலும், கங்கை புனரமைப்பு திட்டத்தினை ஆதாரமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக திருச்சி வரை, இரண்டாம் கட்டமாக திருச்சியில் இருந்து முகத்துவாரம் வரை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்ட திட்ட அறிக்கையின் முதல் பகுதியில் ரூ.1,631.32 கோடிக்கான மதிப்பீடு ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு திட்டமாக கருதி ரூ.713.39 நிதியுதவி கோரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் இத்திட்டத்தின் முதல் திட்ட அறிக்கையினை ஆய்வு செய்து, அறிக்கையினை அளிக்க வேண்டி ஐதராபாத்திலுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

மாநிலத்தின் நீர் ஆதாரங்களை முறைப்படி பயன்படுத்தி அவற்றை பாதுகாக்கும் முதல்வரின் நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக, அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் என்று 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்கொள் படுகைகளை  வளப்படுத்துவதே செயற்கை முறை நீர்ச் செறிவூட்டுதலின் முக்கிய நோக்கமாகும். செயற்கை முறையில் நீர்ச்செறிவூட்டும் கட்டுமானங்களினால் அதிநுகர்வினால் வறண்ட நிலையில் உள்ள நீர்கொள்படுகைகளின் நிலைத்த தன்மையை மேம்படுத்துதல், வருங்கால தேவைகளின் பொருட்டு அதிகமான மேற்பரப்பு நீரை சேமித்து வைத்து பாதுகாத்தல், தூய நீர் நிலத்தில் உட்புகுதல் மூலம் நிலத்தடி நீரின் தரத்தினை உயர்த்துதல் போன்ற தேவைகள் நிறைவடைகின்றன. மேலும் இவை மண் அரிப்பு, வெள்ளத்தை கட்டுப்படுத்துதல், கோடை காலங்களிலும் மண்ணிற்கு ஈரப்பதத்தை வழங்குதல் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளன.

நிலத்தடி நீரைச் செறிவூட்ட உதவும் கட்டுமானங்களான தடுப்பணைகள், கசிவு நீர்க் குட்டைகள், கீழ்மட்ட தடுப்புச் சுவர்கள், நீர்ச்செறிவுத் துளைகள், கிணறுகள் சிறிய அளவிலும், குறைந்த செலவிலும் அமைக்கப்படக் கூடியவை. பருவ மழைக்காலங்களில் உபரி நீரினை கணிசமான அளவில் தேக்கி வைத்து விவசாய வளர்ச்சி மற்றும் நிலத்தடி நீரைச் செறிவூட்டுதலுக்கு பயன்படுத்திட நிலத்தடி நீர் தேக்கங்கள் மற்றும் கதவணைகள் போன்றவை தொழில்நுட்ப சாத்தியமான மாற்று வழியாகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, காவிரி, கொள்ளிடம் மற்றும் தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery ,Kollidam ,Tamiraparani , Doors across the Cauvery, Kollidam and Tamiraparani rivers for the first phase for the benefit of farmers: Minister
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி