ஒன்றிய அரசுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் கோடி சொத்துகள் ஏலம்: சென்னை உள்பட 25 ஏர்போர்ட், 400 ரயில் நிலையம், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவை தாரைவார்ப்பு; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் கோடி சொத்துக்களை ஏலம் விடும் தேசிய பணமாக்கும் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட முக்கிய விமான நிலையங்கள், ரயில்வே, நெடுஞ்சாலை, மின் திட்டம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் பெரும்பாலான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை ஏலம் விட்டு நிதி திரட்டும் திட்டமே தேசிய பணமாக்கல் திட்டம்.

நாட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான, மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் குறித்து 2021-22ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுமான திட்டங்கள், முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றவும், அதற்கான நிதியை திரட்டவும், அரசு சொத்துகளை ஏலம், குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களை அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது வரும் 2022 முதல் 2025 வரை, பணமாக மாற்றுவதை இலக்காக கொண்டு தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு தொலைநோக்கை அளிப்பதோடு, சொத்துக்களை குத்தகைக்கு விட்டு பணமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு, இடைக்கால திட்டமாகவும் செயல்படும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டப்பட உள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாட்டின் பொருளாதாரம், அதன் வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் என ஒன்றிய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துகின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், இதற்கான ஆதார வழிமுறைகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார். கீழ் வரும் துறை வாரியான அமைச்சகங்களின் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் சொத்துகள் பணமாக்கப்படுகிறதே தவிர, அதன் மீது உரிமை கொண்டாட முடியாது. 4 ஆண்டுகளின் முடிவில் குத்தகைக்காரர்களிடம் இருந்து சொத்து மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அரசின் இந்த முடிவு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும்தான் சாதகமாக அமையும். சாலைவசதிகள் மற்றும் மின்சார வசதியை குறைந்த கட்டணத்தில் பெற்று கொண்டிருந்த மக்கள், இனி அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால், கொரோனா போன்ற பேரிடரால் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்குப் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில், இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது என பாஜ தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

* நிதி திரட்ட ஏலம் போகும் 5 முக்கிய துறைகள்

மொத்தம் திரட்டப்பட உள்ள ரூ.6 லட்சம் கோடியில், முக்கிய 5 துறைகளின் மொத்த பங்களிப்பு மதிப்பு மட்டும் 85 சதவீதமாக உள்ளது. அவை பின்வருமாறு:

ஏலம்

விடப்படும் துறை    பங்களிப்பு

சாலைகள்    27%

ரயில்வே    25%

மின் பகிர்மானம்    15%

எண்ணெய்

மற்றும் எரிவாயு    8%

தொலைத் தொடர்பு துறை    6%

* ஆண்டு வாரியாக இலக்கு

நிதியாண்டு    இலக்கு

2020-21    ரூ.88,190 கோடி

2021-22    ரூ.1,62,422 கோடி

2022-23    ரூ.1,79,544 கோடி

2023-24    ரூ.1,67,345 கோடி

* ‘மக்கள் விரோத நடவடிக்கை’

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா சுகேந்து சேகர் ராய் கூறுகையில், ``ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிபணிந்து விட்டது. அரசு பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. முதலாளித்துவத்தினால் அரசு தனியார்மயமாக்கப் பட்டுள்ளது. ரயில்வே, துறைமுகங்கள் என அனைத்தையும் அரசு விற்று வருகிறது. தேசிய பணமாக்கல் என்பதன் பேரில் தனியார் உடமையாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் விரோதமானது,’’ என்று தெரிவித்தார்.

தாரை வார்க்கப்படும் சொத்துக்கள்

* சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் மூலம் ரூ.20,782 கோடி

* 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.1,60,200 கோடி

* 160 நிலக்கரி சுரங்கம் மூலம் ரூ.29,000 கோடி

* 8,154 கி.மீ. தொலைவு இயற்கை எரிவாயு குழாய் மூலம் ரூ.24,462 கோடி

* ஐஓசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் 3,930 கிமீ பைப்லைன் மூலம் ரூ.22,504 கோடி

* பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு சொந்தமான 2,86,000 கி.மீ. பைபர் லைன் மற்றும் 14,197 தொலைபேசி கோபுரங்கள் மூலம் ரூ.35,100 கோடி

* 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில், 15 விளையாட்டு அரங்கம், ரயில்வே குடியிருப்பு உள்ளிட்டவை மூலம் ரூ.1,52,496 கோடி

* 28,608 சர்கியூட் கிலோ மீட்டர் மின் பகிர்மான வழிதடத்தின் மூலம் ரூ.45,200 கோடி

* 6 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி சொத்துகள் மூலம் ரூ.39,832 கோடி

* டெல்லி நேரு விளையாட்டு அரங்கம், பெங்களூரு, ஜிராக்பூர் விளையாட்டு அரங்கங்கள் மூலம் ரூ.11,450 கோடி

* ரியல் எஸ்டேட் திட்டத்தின் கீழ் 240 ஏக்கர் குடியிருப்பு காலனிகள் மூலம் ரூ.15,000 கோடி

* 9 துறைமுகங்கள், 31 துறைமுக திட்டங்கள் மூலம் ரூ.12,828 கோடி

* எந்தெந்த துறைகள்? எவ்வளவு கோடி?

ஒன்றிய அரசு நிதி திரட்டுவதற்காக பல்வேறு முக்கிய துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது. தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலம் துறை வாரியாக திரட்டப்பட உள்ள நிதி விவரம்:

துறை    மதிப்பு     

தேசிய நெடுஞ்சாலைகள்    ரூ.1,62,200 கோடி         

ரயில்வே    ரூ.1,52,496 கோடி         

மின் பகிர்மானம்    ரூ.45,200 கோடி         

மின் உற்பத்தி    ரூ.39,832 கோடி         

இயற்கை எரிவாயு பைப்லைன்    ரூ.24,462 கோடி         

பைப்லைன் உற்பத்தி    ரூ.22,504 கோடி

தொலைத்தொடர்பு    ரூ.35,100 கோடி

கிடங்கு    ரூ.28,900 கோடி

சுரங்கம்    ரூ.28,747 கோடி         

விமான நிலையங்கள்    ரூ.20,782 கோடி         

துறைமுகங்கள்    ரூ.12,828 கோடி

விளையாட்டு அரங்கம்    ரூ.11,450 கோடி

நகர்புற ரியல் எஸ்டேட்    ரூ.15,000 கோடி

Related Stories:

More