மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்குவதற்கான ஆதார வழிமுறைகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

டெல்லி : மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்குவதற்கான ஆதார வழிமுறைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காகப் புதுமையான, மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் குறித்து 2021-22ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் பணமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் (The National Monetisation Pipeline (NMP), உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகள் முதலீட்டாளா்களுக்குத் தொலைநோக்கை அளிப்பதோடு, சொத்துக்களைப் பணமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறைச் செயலா் துஹின் காந்தா பாண்டே ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இந்நிலையில், அதற்கான ஆதார வழிமுறைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது, தேசிய பணமாக்கல் ஆதார புத்தகம் வெளியிடப்பட்டது. நீதிஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

More