×

சுற்றுலா தலங்கள் திறப்பு: களைகட்ட தொடங்கியது கன்னியாகுமரி..!

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா 2வது அலையின் ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் பொது போக்குவரத்து நடந்து வருவதால், பொதுமக்கள் பலரும் குடும்பமாக திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வந்தனர்.  இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்றுமுதல் தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்ததோடு, கன்னியாகுமரியின் இயற்கை எழிலையும் ரசித்தனர்.

இதுபோல பக்தர்களும் புனித நீராடி அம்மனை வழிபட்டு சென்றனர். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டும், படகுகளை இயக்க உயரதிகாரிகளிடம் இருந்து முறையான உத்தரவு வரவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் படகுகளை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். உத்தரவு கிடைத்ததும் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி காணப்பட்டதால், அவர்களை நம்பி இங்கு கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளும் வருமானமின்றி வாடினர். இந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி உள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kanyakumari , Tourist sites open: Weeding begins in Kanyakumari ..!
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...