×

குறைந்தது கொரோனா தொற்று!: கர்நாடகாவில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை ஒட்டி பள்ளிகளுக்கு தோரணம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இன்று முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்தது. 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை அனைத்து பள்ளிகளிலும் மா தோரணம் கட்டி, வாயிலில் கோலமிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலை பள்ளியில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோரும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும். தேசிய அளவில் கர்நாடக மாணவர்கள் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்று குறிப்பிட்டார்.

வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு வர இயலாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கும் கர்நாடக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.


Tags : Karnataka ,Basharaj , Karnataka, School, Opening, Chief Basavaraj Doll
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!